யும் அலை அடங்கிய கடலும் பருவ
காலத்தே சூல் கொண்டு வரும்
முகிலும் ஆகிய மூன்றனையும் ஒக்கும் கரிய திருமேனியை உடையை,
மா மெய்யொடு முரணிய உடுக்கையை - அக்கரிய மேனியோடு
மாறுபட்ட பொன்னிறமான ஆடையினை உடையை, நோனார் உயிரொடு
முரணிய நேமியை - பகைவருடைய உயிரோடு மாறுபட்ட
ஆழிப்படையினை உடையை, செயிர்தீர் செங்கண் செல்வ
- குற்றமில்லாத சிவந்த கண்ணையுடையோனே!, பிருங்கலாதன்
நிற் புகழ் - பிரகலாதன் நின்னைப் புகழா நிற்ப, புகைந்த நெஞ்சின்
புலர்ந்த சாந்தின் - அது பொறாது சினத் தீயால் புதைந்த நெஞ்சோடும்
புலர்ந்த சாந்தோடும் இரணியன் அப்பிரகலாதனை, பல பல
பிணிபட வலந்துழி - பற்பல பிணிகள் படும்படி பிணித்தபொழுது,
மலர்ந்த நோய்கூர்நடுக்கத்து அலர்ந்த புகழோன் - அப்
பிணிப்பாலே மிகுந்த துன்ப மெய்திய காரணத்தானே
நடுக்கத்தையுடைய விரிந்த புகழையுடையோனாகிய அப்பிரகலாதன்,
இகழ்வோன் தாதையாகலின் - தன்னை இகழ்பவன் தன் தந்தையே
ஆகலின்; இகழா நெஞ்சினன் ஆக - தான் இகழாதவனாய் நிற்ப,
நீ இகழா - நீ அவ்விரணியனை இகழ்ந்து, நன்றா நட்ட அவன்
நன்மார்பு முயங்கி - நின்னோடு நன்றாக நண்புசெய்த அப்
பிரகலாதன் வருந்தாமல் அவனுடைய நல்ல நெஞ்சத்துப் பொருந்தி,
ஒன்றாக நட்டவன் உறுவரை மார்பில் - நின்னோடு ஒன்றாக
வரங்கொண்ட அவ் விரணியனுடைய பெரிய மலை போன்ற
மார்பின்கண், படிமதம் சாம்ப ஒதுங்கி - பகைவலி
அழியப் பாய்ந்து, இன்னல் இன்னரொடு - துன்பத்தைக் காட்டும்
உற்பாதங்களொடு பொருந்தி, இடி முரசு இயம்ப -அவ் விரணியனது
இடியை ஒத்த முரசு ஒலியாநிற்ப, வெடிபடா ஒடி தூண் தடியொடு
- நீ பிளவுபட்டு வெளிப்படுதலாலே ஒடிந்த தூணினது பிளப்பினோடே,
தடிதடி- நின்னால் பிளக்கப்பட்ட அவ்விரணியனது தசை, பலபட -
பற்பல வீழாநிற்ப, வகிர் வாய்த்த உகிரினை - வகிர்தல் பொருந்திய
நகத்தினை உடையை;
(வி - ம்.) திருமணி-அழகிய நீலமணி. திரைபாடு -
அலையுண்டாதல். முந்நீர் - ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்னும்
மூன்று நீரையுடையது; கடல். இனி ஆக்கல் அளித்தல் அழித்தலாகிய
மூன்று நீர்மையை உடையது எனினுமாம். இருஞ்சூல் வருமழை என
மாறுக. மா - கருமை. கரியநிறத்தோடு மாறுபட்ட பொன்னிற உடுக்கையை
என்க. நோனார் - பகைவர். செயிர்தீர் செங்கண் - சினந்தீர்ந்த
பொழுதும் இயல்பாகச் சிவந்துள்ள கண் எனினுமாம் இனி
உயிர்க்குற்றத்தை நோக்கத்தாலே தீர்க்குஞ் செங்கண்ணுமாம். எல்லாம்
அவனுடைமையே யாகலின் 'செல்வ' என விளித்தார். |
|
|
|