பிருங்கலாதன் - பிரகலாதன். வலந்துழி - பிணித்த பொழுது.
இகழ வேண்டியவன் இகழா நெஞ்சினனாக நீ இகழ்ந்து எனினுமாம்.
பிணியாலே உற்ற துயர் பொறுத்தற்பொருட்டு நட்ட அவன் மார்பு
முயங்கி என்க.
பகையாய்த் தோன்றி மூன்று பிறப்புத் தீர்ந்தவுடன்
நின்னையடைவேம் எனத் துவாரபாலகர் வரங்கொண்டு இரணியன்
முதலியோராய்த் தோன்றினர் என்பவாகலின், அங்ஙனம் வரங்கோடற்குக்
கேண்மையே காரணமாதல்பற்றி இரணியனை 'ஒன்றா நட்டவன்' என்றார்.
ஒன்றாக என்பது ஈறுகெட்டு நின்றது. படிமதம் - பகை வலி: படி பிரதி
என்பதன் சிதைவு. இன்னர் - உற்பாதம். 'இடி முரசு இயம்ப' என்றது
முரசங்கள் முழக்குவாரின்றியே இடி போலத் தாமே முழங்க என்க.
இங்ஙனம் முழங்குதல் உற்பாதமாம் என்பதனை.
"பிடிமதம் பிறந்தன பிறங்கு பேரியும்
இடியென முழங்குமால் இரட்ட லின்றியே"
(சுந்தர - காட்சிப். செய். 42)
எனவரும் கம்பர் செய்யுளானும்
உணர்க. தூண்தடி - தூணினது பிளப்பு.
தடி தடி - தடியும் தசை.
நின்னாற் பிளக்கப்பட்ட தூண் பிளவுடனே இரணியன்
மார்பிற்றசையும் ஒருங்கே விழ என்க. என்றது அத்துணை விரைவில்
என்ற படியாம். உகிர் - நகம்.
(பரிமே) 6. திரை கிளர்ந்தவழி வெண்மையுடைமையின்
'திரை பாடவிந்த' என்றார். 'மழையிருஞ்சூல்' என்பதனை மேல்
'தாமரைப் பொகுட்டு' என்றது போலக் கொள்க.
மார்பின் (17) வகிர்தல் (21) என இயையும்.
21 - படி என்பது பாகதச் சிதைவு. ஒரு காலத்தே
இரண்டு தடியும்
(தூண் தடியும் மார்பின் தடியும்) வீழ்ந்தன என விரைவு கூறியவாறு.
22 - 24: புருவத்து . . . . . . . . குன்றினோடொக்கும்
(இ-ள்.) புருவத்துக் கருவல் கந்தத்தால் தாங்கி
- பண்டை
நாளிலே இந்நிலம் வெள்ளத்தில் மூழ்கியபொழுது நீ பன்றியாகி
வன்மையுடைய கழுத்தாலே தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்படுத்தது -
இவ்வுலகத்தை மேலே கொணர்ந்து திருத்திய செயல், நடுவண் ஓங்கிய
பலர்புகழ் குன்றினோடு ஒக்கும் - நிலத்தின் நடுவே நின்று அதனைத்
தாங்கி உயர்ந்த பலரானும் புகழப்படும் மேருவின் செயலை ஒக்கும்;
(வி-ம்.) பூருவத்து எனற்பாலது புருவத்து என முதல் குறுகி
நின்றது. கருவல்: ஒருபொருட் பன்மொழி; கருமை, வன்மை என்பன,
வலிமை என்னும் பொருளுடைய இரண்டு சொற்கள். அவை கருவல்
என மையீறு கெட்டுக் கந்தத்திற்கு அடையாய் நின்றன என்க. |