பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்52

மிக வலிய என்க. கந்தம் - கழுத்து. அடிப்படுத்தது - திருத்தியது. ஐ:
சாரியை. மலை பூமியைத் தரிப்பது என்பதனால் அதற்குப் பூதரம் என்று
பெயர் கூறுப. மேரு, பூமியை நிலைக்கச் செய்த செயலோடொக்கும்
என்க.

25-35: நின்வெம்மையும் . . . .. . . . எல்லாம்

      (இ - ள்.) நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள -
நின்னுடைய அழிப்புப் பண்பும் விளக்கமும் ஞாயிற்று மண்டிலத்தின்கண்
உள்ளன, நின் தண்மையும் - சாயலும் திங்கள் உள - நின்னுடைய
அருட்பண்பும் மென்மையும் திங்கள் மண்டிலத்தின்கண் உள்ளன, நின்
சுரத்தலும் வண்மையும் மாரி உள - நின்னுடைய திருவருட் பெருக்கும்
கொடையும் முகிலிடத்தே உள்ளன, நின் புரத்தலும் நோன்மையும்
ஞாலத்துள - நின்னுடைய தாங்குந் தன்மையும் பொறையும் நிலத்தின்கண்
உள்ளன, நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள - நின்னுடைய
மணமும் ஒளியும் காயாம் பூவின்கண் உள்ளன, நின் தோற்றமும்
அகலமும் நீரின் உள - நினது வெளிப்பாடும் பெருமையும்
கடலினிடத்தே உள்ளன, நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
- நின்னுடைய உருவமும் மொழியும் விசும்பின்கண் உள்ளன, நின்
வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள - நின்னுடைய பிறப்பும் மறைதலும்
காற்றின்கண் உள்ளன, அதனால் - இங்ஙனமாதலின், இவ்வும் உவ்வும்
அவ்வும் பிறவும் எல்லாம் - இங்குக் கூறிய இவையும் உவையும்
அவையும் சுட்டிறந்து நின்ற பிற பொருள்களும் ஆகிய எல்லாம், ஏமம்
ஆர்ந்த நிற் பிரிந்து - தமக்குப் பாதுகாவலாக அமைந்த
நின்னிடத்திருந்தே பிரிந்து, மேவல் சான்றன - பின்னும் நின்னைத்
தழுவியே அமைந்துள்ளன;

      (வி - ம்.) வெம்மை - பகைவரை அழிக்குந் தெறல். தண்மை
-அன்பர்க்கு அருளும் அளியுடைமை சாயல் - மென்மை. அஃதாவது
- நாட்டிய மரபின் நெஞ்சு கொளினல்லது உலகியல் வழக்கால் ஒருவர்க்
கொருவர் காட்டப்படாததொரு மென்மைத் தன்மை. சுரத்தல் -
வழங்குந்தோறும் வழங்குந்தோறும் அச் செயலின்கண் மேலும் மேலும்
விருப்பம் நிகழ்தல் என்க. வண்மை - கொடை. மாரி - முகில். புரத்தல்
- தாங்குதல். நோன்மை - பொறை. ஞாலம் - நிலம். இப் பண்புகள்
நிலத்திற்குண்மை "அகழ்வாரைத் தாங்கும் நிலம்" என்பதனாலும் உணர்க.
நாற்றம் - மணம். ஒண்மை - ஒளியுடைமை. பூவை - காயா மலர்:
ஆகுபெயர். தோற்றம் - வெளிப்பாடு. ஒலி - சொல். வருதல்
- அவதரித்தல். ஒடுக்கம் - மறைதல். மருத்து - காற்று. இவ்வும்
உவ்வும் அவ்வும் பிறவும் என்றது சுட்டப்படுவனவும் சுட்டப்படாதனவும்
என்றவாறு. ஏமம் - காவல். மேவல் - பொருந்துதல். நிற்பிரிந்தும்
பின்னும் மேவல் சான்றன என்க.