பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்55

மடவோர். போற்றுநர் - நின்னை வழிபடுமன்பர். மாற்று - மாற்றுதல்;
கொல்லுதல். ஏம் - ஏமம் - காவல்: கடைக்குறை.

      நினக்கு மாற்றாரும் கேளிரும் இலராகலான் மாற்றேமாற்றல் இலை
என ஏதுவாக்குக.

      (பரிமே.) 49 - 54: என்றது. குற்றமாகிய மறமுடையாரிடத்து
வெகுளியும் கோட்டமும் உடையையாய் அஃது இல்லாரிடத்து
இல்லையாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும் செம்மையு
முடையையாய் அஃதில்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப்
பகையாயினார் உயிரின்கண் அதனை மாற்றுதற் றொழிலும், நினக்குக்
கேளிராயினார் உயிரின்கண் அதற்கு ஏமம் செய்தற்றொழிலும்
உடையையல்லை; அவ் விருதிறத்தாரும் நினக்கு இன்மையான்
என்றவாறு.

      55. இவ்வாற்றால் இருதிறத்தாரும் நினக்கு இலரென்றாலும் முன்
'உள்வழி உடையை இல்வழி இலை' என்ற அதனோடு வேறு பாடின்று
அஃது உணர்வாரைப் பெறின், என்றது உயிர்களது இயல்பான் நினக்குப்
பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான் அவை
உளவல்ல என்றவாறாம்.

57 - 65: கோளிருள் . . . .. . . .. அந்தணர் அருமறை

      (இ - ள்.) கோள் இருள் இருக்கை - எப்பொருளையும் தன்பாற்
கரந்து கொள்ளும் இருளினது உறையுள் ஆகிய, மணிமேனி - நீலமணி
போன்ற திருமேனியின்கண், நாறுஇணர், நக்கு அலர் துழா
அய் கண்ணியை - நறுமணங் கமழாநின்ற கொத்துக்களினின்றும் சிரித்து
மலர்ந்த துழாயினாற் றொடுத்த மாலையினை உடையை, பொன்னின்
தோன்றிய புனைமறு மார்ப - நிறத்தாற் பொன்போலத் தோன்றிய
புகழப்படுகின்ற மறுவையுடைய மார்பனே!, நின்னின் தோன்றிய
நிரைஇதழ் தாமரை அன்ன நாட்டத்து - நின்னுடைய உந்தியிற்
றோன்றிய நிரைத்த இதழ்களையுடைய தாமரைமலரை ஒத்த கண்களை
உடையையாய், அளப்பு அரியை - அளத்தற்கரியை, நின்னின் சிறந்த
நின் தாளிணை யவை - நீ நின்னினும் பெருமையுடைய திருவடிகளை
உடையை, நின்னின் சிறந்த நிறை கடவுளவை - நின்னிடத்தே சிறந்த
நிறைந்த கடவுட்பண்பையும் உடையை, அன்னோர் அல்லா வேறும்
உள - அத்தன்மையன அல்லாத பண்புகள் பிற பல நின்பால் உள்ளன,
அவை - அப் பண்புகள்; நின் ஓரன்ன - நின்னையே ஒத்த, அந்தணர்
அருமறை- அந்தணர்களுடைய உணர்தற்கரிய உபநிடதப் பொருளாயுள்ளன;

      (வி - ம்.) கோளிருள் - பொருள்களைக் கரந்துகொள்ளும் இருள்
என்க. இருக்கை - உறைவிடம்; இருளிருக்கை ஆகிய மணி என்க.