50 - 54: பெரும்பெயர் முருகா! கார்த்திகை மகளிர் அவ்வாறு
ஈன்றபொழுதே இந்திரன் நின்னை வச்சிரப்படையால் எறிந்தானாக;
அதனால் நீ ஆறுவேறுருவமுடையை ஆகிப் பின்னர் ஓருருவமுடையை
ஆயினை;
55 - 70: நீ குழவிப்பருவத்தினை உடையை ஆதலால்
நீ
விளையாடிய போரின்கண் இந்திரன் நின் வறுங்கைக்கே உடைதலாலே
இத்தகைய ஆற்றலுடைய இவனே இனி நம் படைக்குத் தலைவன் எனக்
கருதித் தீக்கடவுள் கோழியைத் தந்தான்; அவ் விந்திரன் மயிலைத்
தந்தான்; இயமன் வெள்ளாட்டு மறியைத் தந்தான்; அங்ஙனமே பிற
தேவரும் படையாகத் தந்த மறியும் மயிலும் சேவலும் வில்லும் மரனும்
வாளும் ஈட்டியும் கோடரியும் மழுவும் கனலியும் மாலையும் மணியும்
ஆகிய இவற்றைப் பன்னிரண்டு திருக்கைகளினும் கொண்டு
அவ்விளமைப் பருவத்திலேயே அமரர்படைக்குத் தலைவனாயினை;
இவ்வாற்றால் நீ அவ்வமரர்க் கரசனாகிய இந்திரனது புகழ் வரம்பினையும்
கடந்தாய்;
71 - 81: உருளிணர் கடம்பின் ஒலிதாரோயே! உயிர்களை
வருத்தும் தீய நெஞ்சினை உடையோரும், அறத்தின்கட் சேராத
புகழில்லாரும், கூடாவொழுக்கமுடைய பொய்த் தவவேடமுடையோரும்,
மறுபிறப்பு துறக்கம் நரகம் வீடு முதலியன இல்லை என்னும்
அறிவில்லாதோரும் ஆகிய இன்னோரன்னோர் நினது திருவடி நிழலை
அடையார்; இனி இவரல்லாத அறவோரும் மாதவரால் வணங்கப்படும்
மாண்புடையோரும் நின் தாள் நிழலை எய்துவர்; ஆதலால், யாம்
நின்னை இரந்து வேண்டுவன பொருளும் போகமும் அல்ல; அருளும்
அன்பும் அறமுமாகிய இம் மூன்றுமேயாம். இவற்றை அருள்க.
பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கித்
தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து
நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து
5 வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொஃறகை
மாய அவுணர் மருங்கறத் தபுத்தவேல்
நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக்
குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து
10 மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை
|
|
|
|