தீ- சினத்தீ என்க. திறன் - தன்மை. மார்பின் என்புழி
மார்பினையு டையையாய் இருத்தலோடும் எனச் சில சொற் பெய்து கூறுக.
மா - திருமகள், 'மாயுடை' என யகரவுடம்படு மெய் பெறுதலே
பெரும்பான்மையாயினும் வகரமே பெறல் வேண்டும் என்ற வரையறையின்
மையால் 'மாயுடை' என யகரவுடம்படு மெய்பெற்று முடிந்தது,
'ஆயிருதிணையின்' என்புழிப்போல.
மலர்மார்பு: வினைத்தொகை. மை - குற்றம். வளை
- சங்கு.
சேயுயர்: ஒரு பொருட் பன்மொழி. வேழம்: கொடிக்கு ஆகுபெயர்.
மேனி ஒருவனை, ஏந்திய ஒருவனை, நாஞ்சில் ஒருவனை,
ஒருகுழையொருவனை எனத் தனித்தனி கூட்டி முடித்துக் கொள்க. வாய்
வாங்குதல் - கூர்செய்தல். கூர்வாங்குதல் என்னும் வழக்குண்மையும்
உணர்க. நாஞ்சில் - கலப்பை. ஒருகுழை யொருவன் - பலதேவன்; ஒரு
குழை யொருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்" (கலி - 26;1) எனப்
பிறரும் ஓதுதல் காண்க. ஒருவனை என்புழி ஐகாரம் சாரியை.
இது, திருமாலே! நீ திரு வைகுந்தத்தே திருமகளோடும்
அரவப்பாயலில் அறிதுயில் கொண்டிருக்கும்பொழுதே பலதேவன் முதலிய
திருவவதாரமூர்த்திகளாகவும் இருந்து திருவிளையாடல் புரிகின்றனை என
வியந்தவாறாகக் கொள்க.
6 - 13: எரிமலர்....................................அருமறைப்
பொருளே
(இ-ள்) (11) சேவல் அம் கொடியோய் - கருடச் சேவல்
எழுதப்பட்ட அழகிய கொடியை உடைய பெருமானே, எரிமலர் சினைஇய
கண்ணை - நீ தாமரைமலரை வென்ற அழகிய கண்களை உடையை,
பூவை விரிமலர் புரையும் மேனியை - நீ காயாவினது மலர்ந்த
நாண்மலரின் நிறத்தை ஒக்கும் திருமேனியை உடையை, மேனி - அத்
திருமேனியின்கண், திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பினை - திருமகள்
மிகவும் விரும்பி உறைந்த மார்பினை உடையை, மார்பின் -
திருவீற்றிருந்த அம் மார்பினிடத்தே, தெரிமணி பிறங்கும் பூணினை -
நினக்கே உரியதென அறியப்பட்ட கௌத்துவமணியாகிய திகழும்
அணியை உடையை, மால்வரை எரிதிரிந்தன்ன பொன்புனை உடுக்கையை
- கரிய மலையைச் சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற் போன்றதொரு
பொன்னிற ஆடையும் அணியப்பெற்றனை, நாவல் அந்தணர் அருமறைப்
பொருள் - நாவன்மையுடைய அந்தணர்களுடைய உணர்தற்கரிய வேதப்
பொருள், நின் வலவயின் நிறுத்தும் மேவலுள் - நீ நினது
அருளுடைமையானே நினது வலப்பக்கத்தே நிலைநிறுத்தப்பட்ட உயிர்கள்
நினது அருட்டழுவுதலுள்ளே அமர்ந்து, பணிந்தமை கூறும் - நின்னை
வழிபடும் தன்மையை விரித்துக் கூறாநிற்கும்; யாங்கள் கூறவல்லேம். அல்லேம்.
|
|
|
|