பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனு மூன்றும் (80)
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே.
கடவுள் வாழ்த்து
கடுவ னிளவெயினனார் பாட்டு: கண்ணனாகனார் இசை:
பண்ணுப் பாலை யாழ்.
உரை
1 - 10: பாயிரும் . . . . . . . மூவிரு கயந்தலை
(இ - ள்.) சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து - மிகவும்
உயர்ந்த
பிணிமுகம் என்னும் யானையை ஏறிச் செலுத்தி, பாய் இரும்பனிக் கடல்
- பரந்த பெரிய குளிர்ந்த கடலின்கண் உள்ள, பார் துகள் படப் புக்கு
- பாறைக்கற்கள் நுறுங்கும்படியாகச் சென்று, தீ அழல் துவைப்ப
விட்டெறிந்து - நெருப்பின் கொழுந்து ஒலிக்கும்படி திரிந்து
விட்டெறியப்பட்டு, நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து
- பிறரைத் துன்புறுத்தும் இயல்பினையுடைய அசையும் சூரபன்மனாகிய
மாமரத்தினது வேரினை அறுத்து, வென்றியின் மக்களுள் ஒருமையொடு
பெயரிய - வெற்றியுடைமையாலே புண்ணிய சனம் பாவ சனம் என
இருவகைப் பெயர்களுள் வைத்துப் புண்ணிய சனம் என்னும்
ஒருவகையாலே பெயர்பெற்ற, கொன்று உணல் அஞ்சாக் கொடுவினை
கொல் தகை மாய அவுணர் மருங்கு அற - பிற உயிர்களைக் கொன்று
தின்னலாகிய தீவினைக்கு அஞ்சாதவரும், கொல்லப்படும் தன்மையினை
யுடையாரும் மாயஞ் செய்தலில் வல்லவரும் ஆகிய அவுணர்களுடைய
குலம் அழியும்படி, அமர் உழக்கி - போர்செய்து, தபுத்த வேல்
- கெடுத்த வேற்படையாலே, நாவலந் தண்பொழில் வடபொழில்
ஆயிடை - இந்த நாவலந் தீவினுள் வடபகுதியின்கண் உள்ள,
குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து - கிரௌஞ்சம் என்னும்
பறவையினது பெயர்பெற்ற பெரிய மலையினைக் குடைந்து, மலை
ஆற்றுப் படுத்த - அம் மலையின் ஊடே வழியுண்டாக்கின, மூஇரு
கயந்தலை - ஆறு மெல்லிய தலைகளையுடைய பெருமானே;
(வி - ம்.) பாய் - பரந்த. இருங்கடல் - கரிய
கடல், பெரிய
கடலுமாம். பார் - பாறைக்கல்; கடலினூடுள்ள பாறைக்கல். சேயுயர்:
மிக உயர்ந்த. பிணிமுகம் என்பது முருகப்பெருமானுடைய ஊர்தியாகிய
யானையினது பெயர். "ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி"
(முருகு. 247) என்றும், "பிணிமுக ஊர்தி யொண்தெய் யோனும்"
(புறநா. 56) என்றும், பிற சான்றோரும் கூறுதல் உணர்க. |