அழித்தல், காய்கடவுள் - சிவபெருமான்.
தலைவ -
இறைமைத்தம்மையுடை யோனே. பிறரும் வேள் உளராகலின்
முருகப்பெருமான் செவ்வேள் எனப்பட்டார். பே - அச்சம். விழவு -
வெறியாட்டுவிழா. வெறி - வெறிப்பாட்டு: ஆகுபெயர்.
16 - 20. அவை......................................நின்வலத்தினதே
(இ - ள்.) அவை - அவ் வெறிப்பாடல் கூறும் பொருள்கள்,
இவ்வுலகம் நீயே வரம்பிற்று ஆதலின் - இவ்வுலகம் முழுவதும்
நின்னையே தலைவனாக உடைத்தாதலானே, வாயும் அல்ல -
மெய்ம்மையுடையனவும் அல்ல, பொய்யும் அல்ல - அவ் வேலன்
வெறிக்களத்தினுள் நின்னை அவ்வாறு கண்டு ஏத்துதலானே பொய்ம்மையுடையனவும் அல்ல, சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை
- உருவமும் பிறப்பும் நிறப் பண்பும் குணப்பண்புமாகிய அப் பாடற்
பொருள்களுள் ஒன்றை நீ உடையை ஆகியவிடத்து உருவமும் பண்பும்
பிறப்பும் இல்லாத முழுமுதற் கடவுளாகிய நினது சிறப்பினை ஒழிகுவாய்,
ஏனோர் - முழுமுதற் கடவுளாகிய நின்னையல்லாத உயிர்களாகிய
பிறரெல்லாம், சிறப்பினுள் பிறப்பினுள் உயர்வு ஆகலும் -
நல்வினையாலே உயர்ந்த தெய்வப் பிறப்பினராதலும்; இழிபு ஆகலும்
- தீவினையாலே இழிபிறப்பினராதலும் ஆகிய இந்நிகழ்ச்சி, நின்
வலத்தினது - நினது ஆணையிடத்தது ஆகலான் அம் முழுமுதற்றன்மை
யாகிய நினக்கே உரிய சிறப்பு எக்காலமும் நின்னைவிட்டு நீங்காது;
(வி - ம்.) அவை என்றது அவ் வெறிப்பாடலின்கண்
அமைந்த
பொருள் என்றவாறு. வாய் - வாய்மை: உண்மை. அவை வாய்மையாகா
என்றதற்குக் காரணம் காட்டுவார் 'இவ் வுலகம் நீயே வரம்பிற்று
ஆதலின்' என்றார், யாண்டும் எப்பொழுதும் வியாபகமாயிருந்து உலகினை
நடத்தும் முழுமுதலாகிய நினக்கு உருவமும் பிறப்பும் கூடாமையின்
அவை வாய்மையல்ல என்றவாறு. உண்மை அன்றெனினும். நின்னை
அவ்வாறு கருதி வழிபடுவார்க்கு அவை உடையனாய்க்
காட்சிதருகின்றனை ஆதலால் அவை பொய்யும் அல்ல என்றவாறு.
நின்னை உருவம் பிறப்பு முதலியன உடையனாகக் கருதுமிடத்து நினது
வியாபகத்திற்கு இழுக்காம் ஆகலின், நீ அம்முழுமுதலாஞ் சிறப்பின்றி
ஒழிவை. அன்பர்க்கு அங்ஙனம் நீ வெளிப்படினும் இச் செயலால் நின்
முழுமுதற்றன்மை கெட்டதில்லை என்றபடியாம்.
இறைப்பொருளும் உயிர்ப்பொருளும் சித்துப்பொருளாந்
தன்மையில் ஒரு தன்மையுடையனவாதல் பற்றி உயிர்ப்பொருளை
'ஏனோர்' என்று கூறினார். சித்துப்பொருள்களுள் இறைப்பொருளாகிய
நின்னையன்றி ஏனைய உயிர்ப்பொருள்கள் என்க. ஏனைய உயிர்கள்
சிறத்தலும் இழிவடைதலும் பிறத்தலும் பிறவும் நின் ஆணையாலாம். நீ
சிறந்திருத்தலும் பிறத்தலும் பிறர் ஆணையானன்றி நினது
திருவுள்ளத்தின்படியே ஆம் என்பார், 'ஏனோர் உயர்பாகலும்
இழிபாகலும் நின் வலத்தினது' என்றார்: எனவே அச் சிறப்பு நினக்கு
ஒருகாலும் ஒழியாது என்பது குறிப்பெச்சத்தாற் போந்தது. |
|
|
|