பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்7

      (வி - ம்.) எரிமலர் - தாமரைமலர். எரிமலர் என்றது. தீப்
போன்ற மலர் என உவமை குறியாது உவம ஆகுபெயராகித் தாமரை
என்னும் பொருண் மாத்திரையே குறித்து நின்றது. ஆகலின் எரி போன்ற
தாமரைமலர் போன்ற கண் என விரித்து அடுக்கிய தோற்றம் என்னும்
உவம வழுவாக்காதொழிக. சினைஇய - சினந்த; உவமவுருபின் பொருட்டு.
கண்ணை, மேனியை, மார்பினை, பூணினை, உடுக்கையை என்பன
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுக்கள். நீ நின் வலவயின்
நிறுத்தும் உயிர் நின் மேவலின்கண் இருந்து பணிந்தமை எனச் சில
சொற்கள் வருவித்து முடிக்க. மேவல் - விரும்பி அணைத்துக்கோடல்.
இதனாற் கூறியது நீ உயிர்களை நின் திருவடி நீழலில் அமைத்து
அருளாற் றழுவிக் கொள்வதும், அத்தழுவலின்கண் என்றுமிருந்து
அவ்வுயிர்கள் நின்னை வழிபடுதலால் எய்தும் நிரதிசய இன்பமும்
முதலியவற்றை வேதப்பொருள் கூறும் யாங்கள் அவையிற்றை உணர்ந்து
கூறும் தன்மையுடையேம் அல்லமாகலின் கண்ணை! மேனியை!
என்பனபோன்ற கூறி வழிபடுவேமாயினேம் என்ற படியாம்.

      ஞெமர்தல் - பதிதல்: பரவுதலுமாம். ஞெமர்ந்தமர்ந்த என்றதற்குப்
பதிந்திருந்த எனினுமாம். தெரிமணி - அடையாளந் தெரிந்த மணி; இது
திருமாலுக்குரிய மணி என யாவரும் தெரிந்த மணி என்க. அஃதாவது
கௌத்துவமணி.

      [குறிப்பு: 14 ஆம் அடிமுதல் 25 ஆம் அடிமுடியவுள்ள பகுதி
உருக்காணவியலாதபடி பெரிதும் சிதைந்து கிடக்கின்றமையால் ஈண்டு
அப் பகுதி உரை வரையப்படாமல் விடப்பட்டது]

26 - 32: பொருவேம்..............................எளிது

      (இ - ள்) பொருவேம் என்றவர் மதம் தபக் கடந்து - தமது
அறியாமையாலே நின்னோடு போர் செய்வேம் என்று துணிந்து வந்து
எதிர்ந்த அவுணர்களுடைய வலி கெடும்படி வென்று, செரு மேம்பட்ட
செயிர்தீர் அண்ணல் - போரின் கண்ணே மேன்மை எய்திய குற்றமற்ற
தலைமையினையுடையோனே!, இருவர் தாதை - காமனும் சாமனுமாகிய
இருவருக்கும் தந்தையாகியவனே!, இலங்கு பூண் மாஅல் - விளங்காநின்ற
அணிகலன்களையுடைய திருமாலே!, நின் வரவு தெருள அறிதல் - நினது
வரலாற்றினை விளக்கமாக அறிந்து கொள்ளுதல், மருள் அறு தேர்ச்சி -
மயக்கம் தீர்ந்த தெளிவினையுடைய, முனைவர்க்கும் அரிது -
முனிவர்களுக்கும் அரிதேயாகும்; அன்ன மரபின் அனையோய் நின்னை
- அப்படிப்பட்ட இயல்பினையுடைய அத்தகைய நின்னை, இன்னன்
என்று உரைத்தல்-இன்ன தன்மையுடையன் என்று கூறுதல், எமக்கு -
எளியேமாகிய எம்மனோர்க்கு, எவன் எளிது - எங்ஙனம் எளிதாகும்;
ஆகாதன்றே.

      (வி - ம்.) பொருவேம் - போர்செய்வேம். பொருவேமென்று
எழுந்தவர் அவுணர் என்க. மதம் - வலிமை. தப - கெட, செரு