பக்கம் எண் :

பரிபாடல்- செவ்வேள்72

தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே
தனை அளித்து முன்நிற்கும் வினைஒளித்திட் டோடும்"
(305)
எனவரும் சித்தியாரானும் உணர்க.

இனி, மாதவர் வணங்கியோர் என்றது. சீவன் முத்தரை, இன்னோர் என்றது.
ஏனைச் சரியை கிரியை யோகங்களின் நிற்போரை என்க.

செறுதல் - பிறவுயிரைக் கொல்லுதல். அறத்துச் சேராதவர் - கயவர்கள்.
அயரியோர் என்றது. தவவேடமுடையாராய்க் கூடா வொழுக்கமுடையாரை
அயர்தல் - மறத்தல்: தம்நிலை மறந்து ஒழுகுவோர் என்பார், அயரியோர்
என்றார்.

மறுபிறப்பு முதலியன இல் என்னும் மடவோர் என்க; என்றது நாத்திகரை.

78 - 81: யாஅம்........................................தாரோயே

(இ - ள்.) உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோய் - தேர் உருள் போன்ற
பூக்கள் மலிந்த கொத்தினையுடைய கடப்பமலர் மாலையினையுடைய
பெருமானே, யா அம் இரப்பவை - நினது திருவடி நீழலை எய்த விரும்பிய
அடியேங்கள் நின்பால் வேண்டுவன, பொருளும் பொன்னும் போகமும்
அல்ல - நுகரப்படும் பொருளும் அவற்றைத் தரும் பொன்னும் அவற்றாலே
நுகரும் இன்பமும் அல்ல, அருளும் நின்பால் அன்பும் அறனும் மூன்றும்
- எமக்கு வீடுபயக்கும் நினது திருவருளும் அவ் வருளினை உண்டாக்க
நின்னிடத்தே யாங்கள் செலுத்தக் கடவ அன்பும் அவ் விரண்டானும் வரும்
அறமும் ஆகிய இம் மூன்றுமேயாம், இவற்றை எங்கட்கு அளித்தருளல்
வேண்டும்.

(வி - ம்.) பொருள் என்றது நெல் மனை மாடு குதிரை யானை
முதலியவற்றை. பொன்னுடையார் இவற்றை எய்துதல் ஒருதலையாகலின்
பொன் எனப் பிரித்துக் கூறினார். இவையெல்லாம் யான்-எனது என்னும்
செருக்கினை மிகச்செய்து பின்னும் பிறவிக்கே ஏதுவாம் பொருளுமாகலின்.
யாமிரப்பவை இவை அல்ல என்றார். போகம்-இன்பநுகர்ச்சி. அவனருளாலே
அவன் அடிவணங்குதல் வேண்டுமாகலின், முதற்கண் அவ் வருளே
வேண்டினார். அன்பு-இறையன்பு. அறன் என்றது சிவ புண்ணியச் செயலை.
அவற்றை,
"ஒழுக்கம்அன்பு அருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம்
வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்கிலாத் துறவுஅடக்கம் அறிவொடர்ச் சித்தல் ஆதி
இழுக்கிலா அறங்கள் ஆனால் இரங்குவான் பணிஅ றங்கள்"
(சித்தியார் - சுப - செய். 113)
எனவும்,