தணிபுன லாடுந் தகைமிகு போர்க்கண்
30 துணிபுன லாகத் துறைவேண்டு மைந்தின்
அணியணி யாகிய தாரர் கருவியர்
அடுபுன லதுசெல வவற்றை யிழிவர்
கைம்மா னெருத்தர் கலிமட மாவினர்
நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர்
35 வெண்கிடை மிதவையர் நன்கிடைத் தேரினர்
சாரிகை மறுத்துத் தண்டா வுண்டிகை
ஓரிய வுறுத்தர வூரூர் பிடந்திரீஇச்
சேரி யிளையர் செலவரு நிலையர்
வலிய ரல்லோர் துறைதுறை யயர
40 மெலிய ரல்லோர் விருந்துபுன லயரச்
சாறுஞ் சேறு நெய்யு மலரும்
நாறுபு நிகழும் யாறுவர லாறு
நாறுபு நிகழும் யாறுகண் டழிந்து
வேறுபடு புனலென விரைமண்ணுக் கலிழைப்
45 புலம்புரி யந்தணர் கலங்கினர் மருண்டு
மாறுமென் மலருந் தாருங் கோதையும்
வேருந் தூருங் காயுங் கிழங்கும்
பூரிய மாக்க ளுண்பது மண்டி
நாரரி நறவ முகுப்ப நலனழிந்து
50 வேறா கின்றிவ் விரிபுனல் வரவெனச்
சேறாடு புனலது செலவு;
வரையழி வாலருவி(?) வாதா லாட்டக்
கரையழி வாலருவிக் கால்பா ராட்ட
இரவிற் புணர்ந்தோ ரிடைமுலை யல்கல்
55 புரைவது பூந்தாரான் குன்றெனக் கூடார்க்
குரையோ டிழிந்துரா யூரிடை யோடிச்
சலப்படை யானிரவிற் றாக்கிய தெல்லாம்
புலப்படப் புன்னம் புலரியி னிலப்படத்
தான் மலர்ந் தன்றே
60 தமிழ் வையைத் தண்ணம் புனல்;
விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்
தளிரறிந் தாய்தா மிவை
|
|