பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்8

வின்கண் மேம்பட்ட என்க. அஃதாவது வாகைசூடுதல். செயிர் - குற்றம்
அண்ணல் - தலைமைத்தன்மையுடையோன். இருவர் - காமனும் சாமனும்
என்க. நின்வரவு தெருள அறிதல் என மாறுக. மருள்-மயக்கம். தேர்ச்சி;
தெளிவு. மருளறு தேர்ச்சி முனைவர் என்றது வினையினீங்கி விளங்கிய
அறிவுடையோரை; இவரைச் சீவன் முத்தர் என்ப. சீவன் முத்தர்க்கும்
இறைவனியல்பு அறிதல் கூடாமையின் 'முனைவர்க்கும்' அரிதே' என்றார்.
உம்மை: உயர்வு சிறப்பு. 'அன்னமரபின் அனையோய் என்றது
முனைவர்க்கும் அறியவியலாத மரபினையுடைய அத்தகையோய்
என்றவாறு. இன்னன் - இவ் வியல்புடையோன். "யாவரும் ஓர்
நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்" (திருவாய், 3: 3)
எனப் பெரியாரும் ஓதுதல் காண்க. எமக்கு என்றது. சின்னாட் பல்பிணிச்
சிற்றறிவினேமாகிய எங்களுக்கு என்பதுபட நின்றது.
"பொன்ஆனாய் பொழிலேழும் காவல்பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய்! என்னானாய்! என்னின் அல்லால்
என் அறிவேன் ஏழையேன்"
(திருநெடுந்தாண்டகம். 10)

எனவரும் திருமங்கையாழ்வார் மெய்ம்மொழியை ஈண்டு நினைக.

33 - 36: அருமை......................................அருளல்வேண்டும்

      (இ - ள்,) அருமை நற்கு அறியினும் - நின் வரலாறு
அறிதற்கரிதாதலை யாங்கள் நன்றாக அறிந்திருப்பேமாயினும், நின்வயின்
ஆர்வம் பெருமையின் - அடியேங்கட்கு நின் திருவடிக்கண் எழுந்த
அன்புடைமை சாலப் பெருமையுடையதாகலின், யாம் இவண் வல்லா
மொழிபவை - யாங்கள் இவ்விடத்தே கூறமாட்டாதனவாய்க் கூறாநின்ற
மொழிகள், மெல்லிய எனாஅ - சிறுமையுடையன என்றுகருதி, வெறாஅது
- வெறுத்துவிடாமல், அல்லி அந் திருமறு மார்ப-தாமரையின்கண்
வீற்றிருக்கும் அழகிய திருமகளாகிய மறுவினையுடைய
மார்பையுடையோனே!, நீ அருளல்வேண்டும் - நீ எமக்குத் திருவருள்
புரிதல் வேண்டும்;

      (வி - ம்) நற்கு - நன்கு; வலித்தல் விகாரம். ஆர்வம் - அன்பு.
' வல்லா - மாட்டாத. வன்மையற்றனவாய் என்க. மெல்லிய-மென்மைய:
ஈண்டுச் சிறுமைப்பண்பு குறித்து நின்றது. எனா - என்று. திருமறு'
பண்புத்தொகை. திருவாகிய மறு என்க. மறு-களங்கம். 'திருமறுமார்ப,
என்றது திருமகளாகிய களங்கம் அல்லது பிறிது களங்கம் இல்லாத
மார்பனே என்றபடியாம். அல்லி - அகவிதழ்: ஈண்டுத் தாமரைக்கு
ஆகுபெயர். அந்திரு - அழகிய திருமகள்.

37- 48: விறல்மிகு.................................இமயமுநீ

      (இ - ள்) விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் -
வெற்றி மிகுந்த பெரும்புகழினையுடைய அந்தணர்களாலே காக்கப்படும்
அறமும், ஆர்விலர்க்கு அளியும் நீ - நின்