பக்கம் எண் :

பரிபாடல்- வையை86

ஐந்துவகை விரையினும் முப்பத்திருவகை ஓமாலிகையினும் ஊறிக்
காயப்பட்ட மணநீர் என்க.

      பத்துத் துவராவன: "பூவந்தி திரிபலை புணர் கருங்காலி
நாவலொடு நாற்பான் மரமே" என்பன.

      ஐந்து விரையாவன: கோட்டம் துருக்கம் தகரம் அகில் சந்தனம் என்பன.

      முப்பத்திரண்டு ஓமாலிகையாவன: "இலவங்கம் பச்சிலை
கச்சோலம் ஏலம் குலவிய நாகணங் கொட்டம் நிலவிய, நாகமதாவரிசி
தக்கோலம் நன்னாரி, வேகமில் வெண்கோட்டம் மேவுசீர் - போகாத.
கத்தூரி வேரியிலாமிச்சம் கண்டில்வெண்ணெய் ஒத்தகடு நெல்லி
உயர்தான்றி துத்தமொடு, வண்ணக்கச் சோலம் அரேணுக மாஞ்சியுடன்,
எண்ணும் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும், புன்னை நறுந்தாது
புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம் - பன்னும், பதுமுகம்
நுண்ணேலம் பைங்கொடு வேரி. கதிர்நகையா யோமாலிகை" என்னுமிவை.
"பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையினும்
ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல்"
(சிலப். 6: 76-8)

என்றார் இளங்கோவடிகளாரும்.

      சேறு - சந்தனம் குங்குமம் அலத்தக முதலிய குழம்பு. நெய் -
மண மூட்டப்பட்ட நெய் நாறுபு - நாறி. வரலாறு - வரும்விதம். நிகழும்-
ஒழுகும். விரைமண்ணுக் கலிழை - மணப்பொருளைக் கழுவின கலங்கல்
நீரை. புலம் - வேதம்; அறிவுமாம்.

46 - 51: மாறுமென் . . . . . . . . புனலது செலவு

      (இ - ள்.) மாறும் மென்மலரும் - சூடிக்கழித்தமையானே தம் நிறம்
மணம் மாறிய மெல்லிய மலரும், தாரும் கோதையும் - மைந்தர் அணிந்த
மாலைகளும் மகளிர் அணிந்த மாலைகளும், வேரும் தூரும் காயும்
கிழங்கும் - கரையை இடித்து வருதலானே அக கரைக்கண் உள்ள மரஞ்
செடி கொடிகளினுடைய வேர்களும் தூர்களும் காய்களும் கிழங்குகளும்
ஆகியவற்றோடு மேலும், பூரிய மாக்கள் உண்பது மண்டி - கீழ்மக்கள்
உண்டெஞ்சிய, நார் அரி நறவம் உகுப்ப - பன்னாடையானே வடித்த
கள்ளினை உகுத்தலானே அதனையும் மேற்கொண்டு, இவ் விரிபுனல்
வரவு நலன் அழிந்து வேறாகின்று என - இவ்விரிந்த புதுநீரின் வருகை
நன்மை கெட்டு மாறுபட்டது என்று அவ் வந்தணரே யன்றிப் பிறரும்
நீங்கினர், சேறு ஆடு புனலது செலவு - அந்தக் குழம்பிய புதுநீர் வருகை
இத்தன்மைத்து;