பக்கம் எண் :

பரிபாடல்- வையை87

      (வி.ம்.) மாறும் - மண முதலிய மாறிய. தார் என்பது ஆடவர்
அணியும் மாலையினையும் கோதை என்பது மகளிர் அணியும்
மாலையினையும் குறிக்கும். இதனை,
"தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலிற் றிருமுக நோக்கிக்
கோவலன் கூறும்"
(சிலப். 2: 35-7)

எனவரும் சிலப்பதிகாரத்தானும் பிறாண்டும் இந் நூலினும் காண்க.

      வேர் முதலியன வெள்ளத்தானே அடித்துக் கொண்டு
வரப்பட்டன. பூரியமாக்கள் - கீழ்மக்கள். மண்டி - மிக்கு. அடியின்கண்
உறைந்த கலங்கற் கள்ளுமாம். உண்பது மண்டி உண்பதன்கண் மிக்க
(எஞ்சிய) மண்டி என்க. நார் - பன்னாடை. நிறவம் - கள். நலன் -
தூய்மை.

      எனப் பிறரும் நீங்கினர் என்பது குறிப்பாற் கொள்ளப்பட்டது.

52-60: வரையழி . . . . . . . . . தண்ணம் புனல்

      (இ-ள்.) வரை அழி வால் அருவி (வா?) தாலாட்ட - எல்லை
கடந்து இழியாநின்ற வெள்ளிய அருவி தாலாட்டா நிற்பவும், கரை அழி
வால அருவிக் கால் பாராட்ட - தடையின்றிச் செல்லும் தூயதும்
உருவமற்றதும் ஆகிய தென்றற் காற்றுப் பாராட்டாநிற்பவும், இரவில்
புணர்ந்தோர் - இரவுக் குறிக்கண் தலைவியைத் தலைப்பட்டுக் கூடிய
தலைவர், இடை முலை அல்கல் - அத் தலைவியருடைய
முலையிடையிலே கிடந்து இன்றுயில் கொள்ளுதற்கு, பூந்தாரான் குன்று
புரைவது என - உருளிணர்க் 'கடப்பம்' பூமாலையினையுடைய
முருகனுடைய குன்றாகிய திருப்பரங்குன்றம் பொருந்துவதாம் என்று,
கூடார்க்கு உரையொடு - அத் திருப்பரங்குன்றிற்குச் செல்லாத
மாந்தர்க்குக் கூறுதற்றொழிலோடே, இழிந்து உராய் ஊரிடையோடி -
ஒழுகிப் பரந்து மதுரையின் தெருக்களின் ஊடே ஓடி, சலப்படையான்
-வஞ்சனை செய்யும் மலர்க்கணையினையுடைய காமவேள், இரவின்
தாக்கியது எல்லாம் - இரவின்கண் மகளிரையும் மைந்தரையும் மோதிய
மோதல்களை எல்லாம், புலப்பட - மகளிர்கள் ஊடி அறுத்தெறிந்த
மாலை முதலியவற்றை வாரிக் கொணருமாற்றால் யாவருக்கும்
புலப்படும்படி செய்து, புன் புலரியின் - புறகென்ற வைகறைப்
பொழுதிலே, நிலப்பட மலர்ந்தன்று - தெருக்கள் வறுநிலமாம்படி
வரன்றிப் பரந்தது, தமிழ் வையைத் தண்ணம் புனல் - தமிழையுடைய
வையை யாற்றின்கண் வந்த குளிர்ந்த அழகிய புதுநீர் இத்தன்மைத்து
என அந் நீரின்கண் ஆடிய தலைவன் தன் காதற்பரத்தைக்கு
விரிவாக விளம்பினான்;