பிணிமுக முளப்பப் பிறவு மேந்தி
அருவரைச் சேராத் தொடுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற் சேஎப்பநின் னளிபுனல் வையை
105 வருபுனல் அணிகென வரங்கொள் வோரும்
கருவயி றுறுகெனக் கடம்படு வோரும்
செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும்
ஐயம ரடுகென வருச்சிப் போரும்
பாடுவார் பாணிச்சீரு மாடுவா ரரங்கத் தாளமும்
110 மஞ்சாடு மலைமுழக்கும்
துஞ்சாக் கம்பலைப்
பைஞ்சுனைப் பாஅ யெழுபாவையர்
ஆயித ழுண்க ணலர்முகத் தாமரை
தாட்டா மரைத்தோட் டமனியக் கயமலர்
115 எங்கைப் பதுமங் கொங்கைக் கயமுகைச்
செவ்வா யாம்பல் சென்னீர்த் தாமரை
புனற்றா மரையொடு புலம்வேறு பாடுறாக்
கூரெயிற்றார் குவிமுலைப் பூணொடு
மார னொப்பார் மார்பணி கலவி
120 அரிவைய ரமிர்தபானம்
உரிமை மாக்க ளுவகையமிர் துய்ப்ப
மைந்தர் மார்வம் வழிவந்த
செந்தளிர் மேனியார் செல்ல றீர்ப்ப
எனவாங்கு
125 உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக்
கடம்பமர் செல்வன் கடிநகர் பேண
மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த
நெறிநீர் அருவி யசும்புறு செல்வ
மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
130 தண்பரங் குன்ற நினக்கு.
|
கடவுள் வாழ்த்து
1ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு; 2 மருத்துவன் நல்லச்சுதனார் இசை;
பண்ணுப் பாலை யாழ்.
1. 'ஆசிரியர் நல்லந்துவனார்' 'ஆசிரிய நல்லந்துவனார்' 'ஆரிய நல்லந்துவனார்.' '2. மருத்துவ நல்லச்சுதனார்.'
|