பக்கம் எண் :

பரிபாடல்- திருமால்2

யாவாய்; மயக்கமற்ற முனிவர்க்குங்கூட நின் வரலாறறிதல் அரிதேயாம்;
அங்ஙனமாதலின் எளியேங்கள் நின்னியல்பினை உணர்ந்து கூறுதல்
எங்ஙனம் கூடும்?

      33 - 36: நின் பெருமையின் அருமையினை யாங்கள் உணர்ந்து
வைத்தும் யாங்கள் நின்பால் வைத்த ஆர்வம் பெரிதாகலின், அவ்
வார்வம் காரணமாக யாங்கள் கூறுபவற்றைச் சிறுமையுடையன
என்றிகழ்ந்து விடாமல் திருவருள் புரிதல் வேண்டும்.

      37 - 48: அந்தணர் ஓம்பும் அறமும், நின் அன்பர்க்கு நீ
அருளும் அருளும் நீயே! தீயோரைத் திருத்தும் மறமும் நீயே! நீ
பகைவர்க்கியற்றும் துன்பமும் நீயே! திங்களும் ஞாயிறும் தீயும் நீயே!
அழிக்கும் ஆற்றலுடைய சிவனும் நீ, அவன் செயலும் நீயே! வேதமும்
நீயே! அதனை ஓதும் பிரமனும் அவன் படைத்தற் றொழிலும் நீயே!
முகிலும் விசும்பும் நிலமும் நிலத்தினின் றுயர்ந்த இமயமலையும் நீயே!

      49 - 54: நீ இவ்வாறு எல்லாப் பொருளும் தொழிலும், பிறவுமாக
இருத்தலானே, நினக்கு உவமையாவாரை யாங்கள் காண்கின்றிலேம். நீ
மன்னுயிர்க்கெல்லாம் தலைவன் ஆதலின், அங்ஙனம் தலைமைபூண்போர்
பிறரின்மையின் அத்தகைய புகழோடே பொலிந்து நீ நின்னையே
ஒத்திருக்கின்றனை.

      55 - 60: மேலும், நின்னையே ஒக்கும் புகழினையும் உடையை;
பொன்னாடையை உடையை; கருடக் கொடியுடையை; சங்கமும்
சக்கரமும் உடையை; நீலமணி போன்ற நிறமுடையை; அளவற்ற
புகழினையும் உடையை; அழகுமிக்க மார்பினையுடையை.

      61 - 65: இவ்வாறு நின் புகழ்களை யாமறிந்த அளவானே கூறி,
யாம் எம்முடைய சுற்றம் சூழ நினது திருவடிக்கண் எய்தி இன்புறு
நெஞ்சினேமாய், நின் தாள்நிழல் தொழுது நாள்தோறும் பரவுவோம்.
  ஆயிரம்   விரித்த அணங்குடை அருந்தலை
  தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர
  மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச்
  சேயுயர் பணைமிசை எழில்வேழம் ஏந்திய
5 வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை யொருவனை;
(இது தரவு)
  எரிமலர் சினைஇய கண்ணை பூவை
  விரிமலர் புரையு மேனியை மேனித்