நான்காம் பாடல்
-------
பொருட் சுருக்கம்
மத்தளத்தை ஒத்த தோளினது விரும்புதற்குக் காரணமான அழகினைக்
கண்டோர்க்குத் தம் நெஞ்சம் அவ் வழகையே நினைந்து அவனுடன்
செல்லுவதொழித்துத் தமக்குத் துணையாய்த் தம்மொடு நிற்பதாகுமோ?
ஆகாது.
மண்ணார்ந் திசைக்கும் முழவொடு கொண்டதோள்
கண்ணா துடன்வீழுங் காரிகை கண்டோர்க்குத்
தம்மோடு நிற்குமோ நெஞ்சு.
உரை
(இ-ள்.) மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு - மார்ச்சனை
இடப்பட்டு முழங்காநின்ற மத்தளத்தோடு, கொண்ட தோள் வீழும்
காரிகை கண்டோர்க்கு - உவமிப்பதாகத் திரண்ட தோளினது
விரும்புதற்குக் காரணமான அழகினைக் கண்டவர்க்கு, கண்ணாது
- அவ் வழகினையே கருதி அவர்பாற் சென்றொழிவதல்லது,
நெஞ்சு தம்மொடு நிற்குமோ - அவர் தம் நெஞ்சம் அவர்க்குத்
துணையாக அவரோடே உறையுமோ? உறையாது.
(வி-ம்.) மண் - மார்ச்சனை. முழவு - மத்தளம்.
முழவொடு
உவமிக்கப்பட்ட தோளின் வீழும் காரிகை என்க. வீழ்தல் -
விரும்புதல். காரிகை - அழகு. 'தம்மொடு நிற்குமோ' என்றது,
அவரொடு செல்வதல்லது என்பதுபட நின்றது. கண்ணுதல் -
இடையறாது நினைத்தல்.
இது, தொல் - சொல். 120 ஆம் நூற்பா மேற்கோளாகப்
பேராசிரியத்திற் காணப்பட்டது. |
|
|
|