| தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம் |
| தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த |
| பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும் |
| முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம் |
5 | புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் |
| ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த |
| குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை, |
| 'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும் |
| சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ, |
10 | "பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்; |
| கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்! |
| தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய |
| கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ |
| ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப் |
15 | பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்! |
| ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல் |
| தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர் |
| செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது |
| மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்! |
20 | சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப, |
| அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ |
| ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும் |
| யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற |
| நோயும் களைகுவைமன் |