131
தோழி கூற்று


தோழி

பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்
திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த
அருந் துயர் நீக்குவேன் போல்மன் பொருந்துபு
பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்,
5நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி
இன மீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப,
10தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை
வீழ் ஊசல் தூங்கப் பெறின்
மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய், தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து
15நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி?
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்,
ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்
கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என்
20மேனி சிதைத்தான் துறை
மாரி வீழ் இருங் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண்,
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்!
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை
25பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி!
இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன என்பவை
'தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்?' என,
இன் துணை அன்றில் இரவின் அகவாவே
அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்
30மென் தோள் ஞெகிழ்த்தான் துறை

தலைவி

கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம்
திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை,
இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை
35அருளினகொல், தோழி? அருளினகொல், தோழி?
இரவு எலாம், தோழி! அருளின என்பவை
கணம் கொள் இடு மணல் காவி வருந்த,
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
40வணங்கி உணர்ப்பான் துறை

தோழி

என, நாம்
பாட, மறை நின்று கேட்டனன், நீடிய
வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை
யான் என உணர்ந்து, நீ நனி மருள,
45தேன் இமிர் புன்னை பொருந்தி,
தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே

வரைவு நீட ஆற்றாளாய தலைவியைத் தோழி அவன் முன் அருமை செய்து அயர்த்த காலத்து,அவன் வரவினை யான் அறிந்து, ஊசல் ஆட நின்னைக் கொண்டு போய் ஆடுகின்ற காலத்து, யான் இயற்பழிக்க,நீ இயற்பட மொழிவது கேட்டு, வந்து, ஊசலை ஊக்கியவன் இக் காலத்து வருந்த விடாது, வருத்தம் அறிந்து, வரைந்து கொள்வன் என ஆற்றுவித்தது (14)