| இவர், திமில், எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால், |
| உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரி, |
| தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்ப, |
| கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடற் சேர்ப்ப! |
5 | முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் |
| பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் |
| அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் |
| வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ? |
| முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம் |
10 | இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் |
| கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி |
| உடைப் பொதி இழந்தான் போல், உறு துயர் உழப்பவோ? |
| நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால், |
| மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள் |
15 | அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் |
| சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ? |
| ஆங்கு |
| கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய், |
| தீண்டற்கு அருளி, திறன் அறிந்து, எழீஇப் |
20 | பாண்டியம் செய்வான் பொருளினும் |
| ஈண்டுக, இவள் நலம்! ஏறுக, தேரே! |