| தோழி தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறி, தாங்கள்
|
| ஆடும் குரவையுள் கொண்டுநிலை பாட, அவளை வேண்டுதல் |
| ‘காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள், |
| தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான், |
| நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால், |
| பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம் |
5 | வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி |
| அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே |
| அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும் |
| வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரை, |
| "தேனின் இறால்" என, ஏணி இழைத்திருக்கும் |
10 | கான் அகல் நாடன் மகன் |
| சிறுகுடியீரே! சிறுகுடியீரே! |
| வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா; |
| கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் |
| அல்ல புரிந்து ஒழுகலான் |
15 | காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் |
| வாங்கு அமை மென் தோட் குறவர் மட மகளிர் |
| தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும் |
| தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்' |
| என ஆங்கு, |
20 | அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட |
| என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய் |
| அவரும் தெரி கணை நோக்கி, சிலை நோக்கி, கண் சேந்து, |
| ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி, |
| ‘இருவர்கண் குற்றமும் இல்லையால்’ என்று, |
25 | தெருமந்து சாய்த்தார் தலை |
| தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர, |
| வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து |
| குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள் |
| கொண்டுநிலை பாடிக்காண் |
| தலைவியின் மறுமொழி
|
30 | நல்லாய்! |
| நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத் |
| தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்? |
| புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில், |
| நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ? |
35 | நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே |
| கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ? |
| தோழி கூற்று
|
| விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் |
| பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ? |
| பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை |
40 | கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ? |
| மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் |
| கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ? |
| தலைவியின் மறுமொழி
|
| என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான் |
| மீண்டும் தோழி உரைத்தல்
|
| நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன! |
45 | என ஆங்கு, |
| நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ, |
| தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக, |
| வேய் புரை மென் தோட் பசலையும், அம்பலும், |
| மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க, |
50 | சேய் உயர் வெற்பனும் வந்தனன்; |
| பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே! |