81
தலைவன் கூற்று


புதல்வனை நோக்கித் தலைவி கூறுதல்

மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்

மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர,

பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்,

நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,

5

உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில்

அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப,

பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்

கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா,

ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்

10

போல, வரும் என் உயிர்!

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்,

பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற,

திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,

மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா,

15

பெருந்தகாய்! கூறு, சில


தோழியை நோக்கித் தலைவி கூறிய செய்தி

எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே

வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா,

'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட,

ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண

20

வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன்

வாயுள்ளின் போகான்அரோ


தலைவன் கேட்ப, தோழியை நோக்கித் தலைவி உரைத்தல்

உள்ளி உழையே ஒருங்கு படை விடக்

கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை

எள்ளுமார் வந்தாரே, ஈங்கு


தலைவன்

25

ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர்

கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல,

சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்

ஆணை கடக்கிற்பார் யார்?


தலைவி

அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல்,

30

முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி

உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப

எதிர் வளி நின்றாய்; நீ செல்


தலைவன்

இனி, 'எல்லா! யாம் தீதிலேம்' என்று தெளிப்பவும், கைந்நீவி

யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின்,

35

மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்,

தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும்

ஆ போல் படர் தக, நாம்


தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்துழி, தலைவி தன் மகனைத் தழீஇ விளையாடுகின்ற விளையாட்டின்கண் தன் வரவு அறியாமைச் சென்று நின்ற தலைவன், அவள் ஊடல் உணர்வளவும் உறழ்ந்து சொல்லி, மகன் வாயிலாக ஊடல் தீர்ந்தது