82
தலைவி கூற்று


தலைவி

ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு,

காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை

பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை;

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு

5

புக்க வழி எல்லாம் கூறு


தோழி

கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்

காயாமை வேண்டுவல், யான்


தலைவி

காயேம்.

தோழி கூற்றும், தலைவி புதல்வனைக் கடிதலும்

10

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மருப்புப் பூண் கையுறையாக அணிந்து,

'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர்

15

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,

முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,

'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,

20

வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,

ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்

பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்;

அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்

தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்

25

புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு

கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா!

வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்

பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,

தொடியும் உகிரும் படையாக நுந்தை

30

கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,

வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி;

அன்ன பிறவும், பெருமான் அவள்வயின்

துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ

ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்

35

கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;

அமைந்தது, இனி நின் தொழில்


புத்தேளிர் கோட்டம் வலம் செய்வித்துக்கொண்டு வருதற்குச் சேடியருடன் மகற்போக்கிய தலைமகள்,அவன் நீட்டித்து வந்தவழி, 'தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உன்னிய வழி'யால், தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது (17)