836

19 வையினர் நலனுண்டார் வாராமை நினைத்தலிற்
கையறு நெஞ்சினேன் கலக்கத்து ளாழ்ந்தாங்கே
மையல்கொ ணெஞ்சொடு மயக்கத்தான் மரனோக்கி
யெவ்வத்தா லியன்றபோ (1) லிலைகூம்ப லெவன்கொலோ

எ - து. இறந்துபட்டு வருத்தந்தீராமல் என்னை (2) வைத்து, என்னலத்தை உண்டவர் ஈண்டு வாராதபடியாலே என்னெஞ்சு அவரை நினைக்கையினாலே, அதுகண்டு பனிக்காலம் வருத்த, அது 1கண்டு அப்பொழுதே மயக்கத்தாலே செயலற்ற நெஞ்சினேனாய்க் கலக்கத்திலே அழுந்த, மரம் அதனை நோக்கி வருத்தத்தாற் செய்தவைபோலே மயக்கங்கொண்ட (3) நெஞ்சோடே இலைகள் குவிதற்குக் காரணம் என்னோதான். எ - று.

2எனவாங்கு.

எ - து. என இவள் சொல்லாநிற்க. எ - று.

ஆங்கு, அசை.

24 (4)கரைகாணாப் பௌவத்துக் கலஞ்சிதைந் தாழ்பவன்
றிரைதரப் புணைபெற்றுத் தீதின்றி யுய்ந்தாங்கு
விரைவனர் காதலர் புகுதரநிரைதொடி துயர நீங்கின்றால் விரைந்தே


1. ‘‘மரமெல்லா மிலைகூம்ப’’ கலி. 120 : 6. 

2. ‘‘வையினர்’’ என்பதற்கு, ‘வைத்து’ என்று இங்கே பொருள்கொள்ளும் இவ்வுரைகாரர் இச்சொல்லுக்கு ‘வஞ்சித்து’ என்றும் (தொல். பொருளி. சூ. 50.) பொருள்கொண்டு (அ) வஞ்சித்தமை கூறுதலாகிய வைஇய மொழிக்கு, ‘‘வையினர்......நினைத்ததலின்’’ என்பதை மேற்கோள்காட்டியிருக்கிறார். இச்சொற்கு அப்பொருளுமுண்மை, (ஆ) ‘‘வையாது’’ என்பதற்கு ‘‘வஞ்சியாதே’ என்று (பு. வெ. வெட்சி. 18. கொளுவுரை.) பொருளெழுதியிருத்தலாலும் அறியப்படும்.

3. (அ) ‘‘கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி’’ (கலி. 34 : 10) என்பதன் விசேடவுரையில், ‘‘’புல்லு மரனு மோரறி வினவே, பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே’ இதனுட் பிற அறிவும் உளவென்று கூறினார்; அதனாற் பாவத்திற்கு அஞ்சி மரம் கவின்வாடிற்றென்றார்’’ என இவ்வுரையாசிரியர் எழுதியிருப்பது இங்கே அறிதற்பாலது.
(ஆ) ‘‘கல்லோ மரனு மிரங்க’’ என்பது, சீவக. 2964.

4. மணிமேகலையிலுள்ள சாதுவன் வரலாறும் சீவகசிந்தாமணியிலுள்ள வணிகனாகிய சீதத்தன் வரலாறும் ஈண்டு அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1கண்டபொழுதே, 2எனவாங்கு, ஆங்கு அசை.