'கண்டார் கூற்று' என்ற சொல் உள்ள பக்கங்கள்
120
கண்டார் கூற்று

'அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான்,
வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய
இருள் தூர்பு, புலம்பு ஊர, கனை சுடர் கல் சேர
உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை
5இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம் மாறிக்
கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக,
நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை,
கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!
10மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்கண்,
வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல்,
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி,
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்,
15ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ?
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண்,
வெந்தது ஓர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்,
காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ?
என ஆங்கு,
20இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை,
துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஆற்றும்
நல் இறை தோன்ற, கெட்டாங்கு
25இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே

பிரிவிடை ஆற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு, கழிய ஆற்றாளாயின இடத்து, தலைவன் வரவும் அவளது அக மலர்ச்சியும் கண்டார் கூறியது

143
கண்டார் கூற்றும் தலைவி கூற்றும்

'அகல் ஆங்கண், இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின்,
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று
நல் நுதல் நீத்த திலகத்தள், "மின்னி
மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல்
5கணிகாரம் கொட்கும்கொல்?" என்றாங்கு அணி செல
மேனி மறைத்த பசலையள், ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா,
அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது ஒத்தி
என் செய்தாள்கொல்?' என்பீர்! கேட்டீமின் பொன் செய்தேன்
10மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,
அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
நிறை உடையேன் ஆகுவேன்மன்ற மறையின் என்
15மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண்
சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு
'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே,
'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ
மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின்
20இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று?
'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார்கண்
கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
25அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை
ஒழிய விடாதீமோ என்று
அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
30யாஅம் தளிர்க்குவேம்மன்
நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல
35பல வல்லன் தோள் ஆள்பவன்
நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப;
இனையும் என் நெஞ்சம்போல், இனம் காப்பார் குழல் தோன்ற;
சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப;
போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய;
40காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை
மாலையும் வந்தன்று, இனி
இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்;
அருள் இலை; வாழி! சுடர்!
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின்,
45மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின்,
யாண்டும், உடையேன் இசை,
ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப்
பீர் அலர் போலப் பெரிய பசந்தன
50நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று,
பேர் அஞர் செய்த என் கண்
தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ
இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்
55என் உயிர் காவாதது?
என ஆங்கு,
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர,
தென்னவற் தெளித்த தேஎம் போல,
60இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே

இதுவும் அது