'தலைவன் கூற்று' என்ற சொல் உள்ள பக்கங்கள்
56
தலைவன் கூற்று

ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால்,
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு,
கழும முடித்து, கண் கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி
5தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து,
ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்? ஆண்டார்,
10கடிது, இவளைக் காவார் விடுதல்: கொடி இயல்,
பல் கலை, சில் பூங் கலிங்கத்தள் ஈங்கு, இது ஓர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!
இவளைச் சொல்லாடிக் காண்பேன், தகைத்து
நல்லாய்! கேள்:
15ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என,
தூது உண் அம் புறவு என, துதைந்த நின் எழில் நலம்
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! நிற் கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?
நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என,
20முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள்
வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்! நிற் கண்டார்க்கு
அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ?
முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என,
பெயல் துளி முகிழ் என, பெருத்த நின் இள முலை
25மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! நிற் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
என ஆங்கு,
பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய்! கேள், இனி:
30நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும், தவறு இலர்;
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு,
‘பறை அறைந்தல்லது செல்லற்க!’ என்னா
இறையே தவறு உடையான்

‘காமம் சாலா இளமையோள்வயின், ஏமம் சாலா இடும்பை எய்தி, நன்மையும் தீமையும் என இரு திறத்தால், தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து, சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே’ என்பதனால், தருக்கிச் சொல்லி, சொல் எதிர் பெறான் இன்புற்றது (20)

57
தலைவன் கூற்று

வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப,
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
5தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட,
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி:
பூந் தண் தார், புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல்,
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்,
10ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்,
சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? சின்மொழி!
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை,
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
15கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? கனங்குழாய்!
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின்மேல்,
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ? காழ் கொண்ட இள முலை
20என ஆங்கு,
இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே

இதுவும் அது

58
தலைவன் கூற்று

வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள்,
பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின்,
கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல்,
கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்!
5நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை,
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்:
உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக,
இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம்
10வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும்,
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
15அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்,
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
என ஆங்கு
20ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே

இதுவும் அது

59
தலைவன் கூற்று

தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை,
5சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால
என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி:
10மருளி, யான் மருள் உற, ‘ "இவன் உற்றது எவன்?" என்னும்
அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால்,
வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
உருளிழாய்! ‘ "ஒளி வாட, இவன் உள் நோய் யாது?" என்னும்
15அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால்,
பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?
ஆய்தொடி! ' "ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?" என்னும்
நோய் இலை இவட்கு’ என நொதுமலர் பழிக்குங்கால்,
20சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?
என ஆங்கு,
அனையவை உளையவும், யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்!
25செய்ததன் பயம் பற்று விடாது;
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே

இரந்து குறையுற்றுப் பின்னின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி ‘இங்ஙனம் வருத்துவையாயின், நீ செய் தவம் இன்றாம்’ எனக் கூறியது

64
தலைவன் கூற்று


தலைவன்

அணி முகம் மதி ஏய்ப்ப, அம் மதியை நனி ஏய்க்கும்,
மணி முகம், மா மழை, நின் பின், ஒப்ப, பின்னின்கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,
5அரும் படர் கண்டாரைச் செய்து, ஆங்கு இயலும்
விரிந்து ஒலி கூந்தலாய்! கண்டை; எமக்குப்
பெரும் பொன் படுகுவை பண்டு

தலைவி

ஏஎ, எல்லா! மொழிவது கண்டை, இஃது ஒத்தன்; தொய்யில்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்;
10உழுவது உடையமோ, யாம்?

தலைவன்

உழுதாய்
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய்! யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இஃதோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ? ஒருங்கே
15துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த
குவளையும், நின் உழவு அன்றோ? இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய்! இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி

தலைவி

எல்லா! நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு;
20முற்று எழில் நீல மலர் என உற்ற,
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்,
பெரும் பொன் உண்டு என்பாய்! இனி

தலைவன்

நல்லாய்! இகுளை! கேள்:
ஈங்கே தலைப்படுவன், உண்டான் தலைப்பெயின்,
25வேந்து கொண்டன்ன பல

தலைவி ஆக!’ என உடம்பட்டுக் கூற, தலைவன் உரைத்தல்

‘ஆங்கு ஆக!’ ‘அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ,
முத்து ஏர் முறுவலாய்! நீ படும் பொன் எல்லாம்
30 உத்தி எறிந்துவிடற்கு’

அருமை செய்து அயர்த்த தலைவன் வந்துழி, தலைவி எள்ளின இடத்து, தலைவன் அவளோடு உறழ்ந்து கூறி, நகையாடி, கூட்டத்திற்கு உடம்படுவித்தது. இதற்கு விதி ‘உயர் மொழிக்கு உரிய உறழும் கிளவி’ என்பதனுள், ‘தலைவன் உயர் மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறும்’ என்றாம் (28)

81
தலைவன் கூற்று


புதல்வனை நோக்கித் தலைவி கூறுதல்

மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்

மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர,

பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்,

நலம் பெறு கமழ் சென்னி, நகையொடு துயல்வர,

5

உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில்

அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப,

பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக்

கால் வல் தேர் கையின் இயக்கி, நடை பயிற்றா,

ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்

10

போல, வரும் என் உயிர்!

பெரும! விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்,

பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற,

திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப,

மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா,

15

பெருந்தகாய்! கூறு, சில


தோழியை நோக்கித் தலைவி கூறிய செய்தி

எல்லிழாய்! சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே

வாய் ஓடி, 'ஏனாதிப்பாடியம்' என்றற்றா,

'நோய் நாம் தணிக்கும் மருந்து' எனப் பாராட்ட,

ஓவாது அடுத்து அடுத்து, 'அத்தத்தா!' என்பான் மாண

20

வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று, இவன்

வாயுள்ளின் போகான்அரோ


தலைவன் கேட்ப, தோழியை நோக்கித் தலைவி உரைத்தல்

உள்ளி உழையே ஒருங்கு படை விடக்

கள்ளர் படர்தந்தது போல, தாம் எம்மை

எள்ளுமார் வந்தாரே, ஈங்கு


தலைவன்

25

ஏதப்பாடு எண்ணி, புரிசை வியல் உள்ளோர்

கள்வரைக் காணாது, 'கண்டேம்' என்பார் போல,

சேய் நின்று, செய்யாத சொல்லிச் சினவல்; நின்

ஆணை கடக்கிற்பார் யார்?


தலைவி

அதிர்வு இல் படிறு எருக்கி, வந்து என் மகன்மேல்,

30

முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி

உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப

எதிர் வளி நின்றாய்; நீ செல்


தலைவன்

இனி, 'எல்லா! யாம் தீதிலேம்' என்று தெளிப்பவும், கைந்நீவி

யாதொன்றும் எம்கண் மறுத்தரவு இல்லாயின்,

35

மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்,

தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும்

ஆ போல் படர் தக, நாம்


தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்துழி, தலைவி தன் மகனைத் தழீஇ விளையாடுகின்ற விளையாட்டின்கண் தன் வரவு அறியாமைச் சென்று நின்ற தலைவன், அவள் ஊடல் உணர்வளவும் உறழ்ந்து சொல்லி, மகன் வாயிலாக ஊடல் தீர்ந்தது

92
தலைவன் கூற்று


தலைவன்

புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே:
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,
மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது,
5உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்;
அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும்,
உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்ப்
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
தருதல் தகையாதால் மற்று
10நனவினால் போலும், நறுநுதால்! அல்கல்
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவினகத்து

தலைவி

உரை, இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக்
15கண்டது எவன் மற்று நீ?

தலைவன்

கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும்
மட நடை மா இனம், அந்தி அமையத்து,
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,
இறை கொண்டு இருந்தன்ன நல்லாரைக் கண்டேன்,
20துறை கொண்டு உயர் மணல்மேல் ஒன்றி நிறைவதை,

தலைவி

ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய், கனா

'முற்றும் கேட்டு வெகுள்' ஏன்ற தலைவனுக்குத் தலைவி 'உரை' என்ன அவன் உரைத்தல்

'கேட்டை விரையல் நீ; மற்று வெகுள்வாய்!' 'உரை' 'ஆண்டு
இதுவாகும், இன் நகை நல்லாய்! பொதுவாக
25தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்
பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்
துனை வரி வண்டின் இனம்
30மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக்
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச,
அவருள்,
ஒருத்தி, செயல் அமை கோதை நகை;
ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப;
35ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்;
ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க,
ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்;
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப:
ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், அலவுற்று
40வண்டினம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன்
தண் தார் அகலம் புகும்
ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை
முடி தாழ் இருங் கூந்தல் பற்றி, பூ வேய்ந்த
கடி கயம் பாயும், அலந்து
45ஒருத்தி, கணம் கொண்டு அவை மூச, கை ஆற்றாள், பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி,
வணங்கு காழ் வங்கம் புகும்
ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
50இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை
ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரியிழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு
வண்டலவர்; கண்டேன், யான்'

தலைவி

55நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்
கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்
செய்வது இல் என்பதோ? கூறு

தலைவன்

பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்
60நல் வாயாக் காண்டை நறுநுதால்! 'பல் மாணும்
கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்
பிரிந்தீர்! புணர் தம்மின்' என்பன போல,
அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில்
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
65நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் பெறாது ஆற்றாமை வாயிலாகப் புக்கு,தலைவியை நயப்பித்தல் காரணமாக, 'தெய்வ மகளிர் பொய்தல் அயர்வது ஓர் கனாக் கண்டேன்;அது நன் வாயாப் பருவம் வந்து இறுத்தது பாராய்' என ஊடல் தீர்வது பயனாகத் தலைவிக்குக் கூறியது (27)

93
தலைவியின் புலவி


தலைவி

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய,
கண்டது எவன்? மற்று உரை

தலைவன்

5நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின்
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்

தலைவி

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்
10அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்

தலைவன் கூற்றும் தலைவியின் மாற்றமும்

'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால்,
"இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய
அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும்
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
15மாயமோ; கைப்படுக்கப்பட்டாய் நீ; கண்டாரை
வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி:
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப,
பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
20செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ?
நறுந் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரற் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?
25ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?
கண்ட கடவுளர்தம்முளும், நின்னை
30வெறி கொள் வியல் மார்பு வேறாகச் செய்து,
குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!
தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
35நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு'

'காவற் பாங்கின் ஆங்கு ஓர் பக்கமும், என்புழி, 'ஆங்கு ஓர் பக்கமான கடவுளரைக் கண்டு தங்கினேன்' என்ற தலைவற்கு, 'நீ கண்ட கடவுளர் இவர்' எனக் கூறிப் புலந்தது

109
வினை வல பாங்கின் தலைவன் கூற்று

கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும்,
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்
5தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள்
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு
பண்ணித் தமர் தந்து, ஒரு புறம் தைஇய
10கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல்
புண் இல்லார் புண்ணாக நோக்கும்; முழு மெய்யும்
கண்ணளோ? ஆயர் மகள்
இவள்தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி,
வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
15ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்கொல்லோ?
படை இடுவான்மன் கண்டீர், காமன் மடை அடும்
20பாலொடு கோட்டம் புகின்
இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள்
'யார்க்கும் அணங்காதல் சான்றாள்' என்று, ஊர்ப் பெண்டிர்,
'மாங்காய் நறுங் காடி கூட்டுவேம்; யாங்கும்
எழு நின் கிளையொடு போக' என்று தத்தம்
25கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும்,
வாயில் அடைப்ப, வரும்

வினை வல பாங்கின் தலைவியைக் கண்ட வினை வல பாங்கின் தலைவன் 'காமம் சாலா இளமையோள் வயின்,ஏமம் சாலா இடும்பை எய்தி', கூறியது

113
வினை வல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று


தலைவன்

நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்,
அலமரல் அமர் உண்கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்

தலைவி

பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
5யார் எல்லா! நின்னை அறிந்ததூஉம் இல்வழி?

தலைவன்

தளிரியால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன், மற்று யான்

தலைவி

ஒக்கும்மன்
புல்லினத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
10நல் இனத்து ஆயர், எமர்

தலைவன் கூற்றும் தலைவி மாற்றமும்

'எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லைமன்'
'ஏதம் அன்று; எல்லை வருவான் விடு'

தலைவன்

விடேன்.
15உடம்பட்டு நீப்பார் கிளவி, மடம் பட்டு,
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்?

தலைவி

'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய
20காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்
பொய்ம் மொழி தேறுவது என்?

தலைவன்

தெளிந்தேன், தெரியிழாய்! யான்
பல்கால், யாம் கான்யாற்று அவிர் மணற் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
25முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று,
உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகுடன் நின்றன,
பல் ஆன் இன நிரை; நாம் உடன் செலற்கே

வினை வல பாங்கின் தலைவியை ஆற்றிடைக் கண்டு, அவளை வினை வல பாங்கின் தலைவன் விலக்கி, அவளோடு சிறிது கூறியவழி, அவள் கூடலுறுகின்றாள் கூறியது, இது கைக்கிளை

117
தலைவன் கூற்றும் தலைவி கூற்றும்


கையில் உள்ளது யாது?' எனத் தலைவியைத் தலைவன் வினாவுதல்

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
5கையது எவன்? மற்று உரை

தலைவியின் விடையும் தலைவன் வினாவும்

'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள?
காண் தக்காய்! எற் காட்டிக் காண்.'

தலைவி

10காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை

தலைவன்

முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்!
எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
15மெல்லியது, ஓராது அறிவு

ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது

138
தலைவன் கூற்று

எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு,
அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு,
வறிதாக பிறர் என்னை நகுபவும், நகுபு உடன்,
5மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி,
தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன்கொலோ?
மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை
அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து,
10மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன்
எல்லீரும் கேட்டீமின் என்று
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை,
நல்கியாள், நல்கியவை
பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த
15நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல,
உக்குவிடும் என் உயிர்
பூளை, பொல மலர் ஆவிரை வேய் வென்ற
தோளாள் எமக்கு ஈத்த பூ
20 உரிது என் வரைத்து அன்றி, ஒள்ளிழை தந்த
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த
நெய்யுள் மெழுகின் நிலையாது, பை பயத்
தேயும் அளித்து என் உயிர்
இளையாரும், ஏதிலவரும் உளைய, யான்
25 உற்றது உசாவும் துணை
என்று யான் பாடக் கேட்டு,
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணையாய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று,
30 அடங்கு அருந் தோற்றத்து அருந் தவம் முயன்றோர் தம்
உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே

மடல் ஊர்ந்து தலைவியை எய்திய தலைவன் தான் மடல் ஊர்ந்தவாறும், அவளை எய்தியவாறும், தனக்குப் பாங்காயினார்க்குக் கூறியது

139
தலைவன் கூற்று

சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த
சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற
5துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி,
ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என்
நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன்,
அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,
10ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது,
பாடுவேன், பாய் மா நிறுத்து
யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப,
15'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன்
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
காமக் கடல் அகப்பட்டு
உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல்
உறீஇயாள் ஈத்த இம் மா
20காணுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என்
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்
'மாண் இழை மாதராள் ஏஎர்' என, காமனது
ஆணையால் வந்த படை
காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்
25எழிநுதல் ஈத்த இம் மா
அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும்
வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!
30அழல் மன்ற, காம அரு நோய்; நிழல் மன்ற,
நேரிழை ஈத்த இம் மா
ஆங்கு அதை,
அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம்
ஒரீஇ, துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர்
35உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர்
உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என்
துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே

மடல் ஏறுகின்ற தலைவன் சான்றோர்க்குக் கூறியது

140
தலைவன் கூற்று

கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே,
பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது
மா என்று உணர்மின்; மடல் அன்று: மற்று இவை
பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த
5புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி,
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி:
நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம்
10இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு
அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்;
அன்னேன் ஒருவனேன், யான்
என்னானும், 'பாடு' எனில், பாடவும் வல்லேன், சிறிது; ஆங்கே,
'ஆடு' எனில், ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ
15என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக,
நன்னுதல் ஈத்த இம் மா?
திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும்,
தம் காதல் காட்டுவர், சான்றவர் இன் சாயல்
ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்
20கண்டும், கண்ணோடாது, இவ் ஊர்
தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவைப் படில், உய்யுமாம் பூங் கண்
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம்
உணர்ந்தும், உணராது, இவ் ஊர்
25வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார்
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச்
செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம்
அறிந்தும், அறியாது, இவ் ஊர்
ஆங்க
30என் கண் இடும்பை அறீஇயினென்; நும்கண்
தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன
மருளுறு நோயொடு மம்மர் அகல,
இருளுறு கூந்தலாள் என்னை
அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே

'மடல் ஏறுவேன்' என்ற தலைவன் கண்டார்க்குக் கூறியது

141
தலைவன் கூற்றும் கண்டோர் கூற்றும்

அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
வேட்டவை செய்து, ஆங்கு, காட்டி மற்று ஆங்கே,
அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று
5அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி
அணி நலம் பாடி வரற்கு
ஓரொருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி
நீருள் நிழல் போல், கொளற்கு அரியள் போருள்
அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
10மன்றம் படர்வித்தவள் வாழி, சான்றீர்!
பொய் தீர் உலகம் எடுத்த கொடிமிசை,
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் அம்ம, சான்றீர்!
15கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ
பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு?
இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும்
கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க்
20கல்லாமை காட்டியவள் வாழி, சான்றீர்!
என்று, ஆங்கே,
வருந்த மா ஊர்ந்து, மறுகின்கண் பாட,
திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே,
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந் திறை
25போல, கொடுத்தார், தமர்

இரந்து பின்னின்ற தலைவன் மடல் ஏறியவழி, அவள் தமர் அஞ்சி, தலைவியைக் கொண்டு வந்து கொடுத்தலைக் கண்டோர் கூறியது