'தலைவி கூற்று' என்ற சொல் உள்ள பக்கங்கள்
6
தலைவி கூற்று

மரையா மரல் கவர, மாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு, மூழ்கச் சுருங்கி, புரையோர் தம்,
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்கு
5 தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந் துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய, காடு என்றால்,
என், நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல, நெடுந் தகாய்! எம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
10 துன்பம் துணையாக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ, எமக்கு?

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து, ‘நீர் செல்லும் கடுஞ் சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ எனத் தலைவி கூறியது

11
தலைவி கூற்று

‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என,
பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
5வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:
‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே
10‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே
‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
15துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரே
என ஆங்கு
இனை நலம் உடைய கானம் சென்றோர்
20புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே

தலைவி, மூன்றன் பகுதி தலைவன் கூறிப் பொருள்வயிற் பிரிகின்ற காலத்து,‘காடு கடியவாயினும், இவ் வகைப் பட்டனவும் உள’ என்று கூறினார்; அவை காண்டலின் வருவர்’ எனத் தோழிக்குக் கூறி, அதற்கு நிமித்தமும் கூறி, ஆற்றுவித்தது. மூன்றன் பகுதி கூறுதலாவது: ‘அறத்தினால் பொருள் ஆக்கி, அப் பொருளால் காமம் நுகர்வேன்’ என்றலாம். ‘உடைமையது உயர்ச்சி கூறிப் பிரிந்தான்’ எனக்கிளவி கூறின், பொருள் வயிற் பிரிதல் இன்றாம், அது பொருள்வயிற் பிரிவை விலக்கும் என்றலின் (10)

20
தலைவி கூற்று

பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற,
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்,
தணிவு இல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும்
பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும்
5மணி திகழ் விறல் மலை வெம்ப, மண் பக,
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ் சுரம்
‘கிளி புரை கிளவியாய்! நின் அடிக்கு எளியவோ,
தளி உறுபு அறியாவே, காடு?’ எனக் கூறுவீர்!
வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து
10அளி என, உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ?
‘ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின்,
ஆறு நீர் இல’ என, அறன் நோக்கிக் கூறுவீர்!
யாறு நீர் கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும்
தேறு நீர், உடையேன் யான்; தெருமந்து ஈங்கு ஒழிவலோ?
15‘மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும்
மாண் நிழல் இல, ஆண்டை மரம்’ எனக் கூறுவீர்!
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும்
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ?
என ஆங்கு,
20‘அணை அரும் வெம்மைய காடு’ எனக் கூறுவீர்!
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை,
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே?

பிரிவு உணர்த்திய தலைவற்குத் தலைவி ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ என்றாட்கு, அவன் கானின் கடுமையும், தலைவி மென்மையும் கூறுவது கேட்ட தலைவி, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ என்றது

23
தலைவி கூற்று

இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின், பூஞ் சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
தனியே இறப்ப, யான் ஒழிந்திருத்தல்
5நகுதக்கன்று, இவ் அழுங்கல் ஊர்க்கே:
இனி யான்,
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்
10நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓரன்னர்
என ஆங்கு,
15யானும் நின்னகத்து அனையேன்; ஆனாது,
கொலை வெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே

பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைவி, ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’என்றாட்கு, உடன்படாது அவன் பிரியலுற, தனது இறந்துபாடு தோன்றக் கூறியது

24
தலைவி கூற்று

‘நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்
அஞ்சியது ஆங்கே அணங்காகும்’ என்னும் சொல்
இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற: நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்,
5‘இது ஒன்று உடைத்து’ என எண்ணி, அது தேர,
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல் கொண்டு என் தோள் கனவுவார், ‘ஆய் கோல்
தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள்,
கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ
10இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்
நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்று,
செய் பொருள் முற்றும் அளவு?’ என்றார்; ஆயிழாய்!
தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின்,
15‘தொய்யில் துறந்தார் அவர்’ என, தம்வயின்,
நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு
போயின்று, சொல், என் உயிர்

தலைமகன் குறிப்புக் கண்டு, ‘பிரிவன்’ என ஐயுற்றுச் செல்கின்ற தலைவி,அக்காலத்துத் தலைவன் கனவின் அரற்றினமை கேட்டு, ‘பொருள்வயிற் பிரிகின்றான்’எனத் துணிந்து, ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்பதனால், அந்தணன் அறம் கருதித் தூதின் பிரிந்து, அவ் அரசர் செய்த பூசனை வாங்கிக் கொண்டு வருதற்குப் பிரிகின்றது என்று கொள்க. ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமம்’ கூறுகின்றது.(23)

42
தலைவி கூற்று


வள்ளைப் பாட்டுப் பாடத் தோழி அழைக்க, தலைவி இசைதல்

‘மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த
முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி,
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன்
5மறந்தான்; மறக்க, இனி; எல்லா! நமக்குச்
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம், ஆயின்; அவன் திறம்,
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்,
வள்ளை அகவுவம், வா’ ‘இகுளை! நாம்
வள்ளை அகவுவம், வா’

தோழி இயற்பழித்தல்

10காணிய வா வாழி, தோழி! வரைத் தாழ்பு
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா
நாணிலி நாட்டு மலை

தலைவி இயற்பட மொழிதல்

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
15அறம் புரி நெஞ்சத்தவன்?

தோழி

தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை

தலைவி

கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை
20நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்

தோழி

வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று

தலைவி

25எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி
அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்
என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்,
தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா,
30சாயல் இன் மார்பன் சிறு புறம் சார்தர,
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்
ஆயிழை மேனிப் பசப்பு

முன்பு பெற்ற வழி மலிந்ததனைப் பின்பு பிரிந்த வழிக் கலங்கிக் கூறியது. என்னை? தலைவன் அருமை செய்து அயர்த்தவழி, தோழி தலைவியை ஆற்றுவித்தற்பொருட்டுத் தலைவன் இயற் பழிப்ப, தலைவி இயற்பட மொழிந்ததனைச் சிறைப்புறமாகக் கேட்டு,தலைவன் முன் ஒருகால் வந்து சிறு புறம் சாரத் தான் ஆற்றினமை குறித்து, பின் ஒருகால் அவ்வாறு பாட, அவன் சிறு புறம் சாராமையின் கலங்கி, நெஞ்சொடு கூறியது ஆகலின்(6)

51
தலைவி கூற்று

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
5அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
‘அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
10வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,
‘அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
‘உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
15கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்

‘புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது

54
தலைவி கூற்று

"கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற,
பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை,
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்!
அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு?" என்ன,
5நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி,
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை,
நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்;
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு,
10செறாஅச் செங் கண் புதைய வைத்து,
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;
தொய்யில் இள முலை இனிய தைவந்து,
தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்
15அதனால்,
அல்லல் களைந்தனன், தோழி! நம் நகர்
அருங் கடி நீவாமை கூறின், நன்று’ என
நின்னொடு சூழ்வல், தோழி! ‘நயம் புரிந்து,
இன்னது செய்தாள் இவள்’ என,
20மன்னா உலகத்து மன்னுவது புரைமே

‘கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் களைந்தேன் என உரை’ எனத் தோழிக்கு உரைத்தற்கண் தலைவி கூறியது. அது நொதுமலர் வரைவிற்கு மண முரசு இயம்பிய வழி, ஆண்டானும், பிற ஆண்டானும், தோழிக்கு, ‘இன்னவாறு கூட்டம் நிகழ்ந்தது’ எனக்கூறி, ‘அதனை நமர் அறியக் கூறல் வேண்டும்’ என்றும், தலைவற்கு நம் வருத்தம் அறியக் கூறல் வேண்டும்' என்றும், தலைவி கூறுதற்கண் நிகழ்வது (18)

55
தலைவி கூற்று

மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல்,
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு,
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை,
இன் நகை, இலங்கு எயிற்று, தேம் மொழி துவர்ச் செவ் வாய்,
5நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி:
‘நில்’ என நிறுத்தான்; நிறுத்தே வந்து,
நுதலும் முகனும், தோளும், கண்ணும்,
இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ,
‘ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று;
10மை தீர்ந்தன்று, மதியும் அன்று;
வேய் அமன்றன்று, மலையும் அன்று;
பூ அமன்றன்று, சுனையும் அன்று;
மெல்ல இயலும், மயிலும் அன்று;
சொல்லத் தளரும், கிளியும் அன்று'
15என ஆங்கு,
அனையன பல பாராட்டி, பையென,
வலைவர் போல, சோர் பதன் ஒற்றி,
நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப்
புலையர் போல, புன்கண் நோக்கி,
20தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;
காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன்
தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி!

‘பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி, ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்,அருமை சான்ற நால் இரண்டு வகையின், பெருமை சான்ற இயல்பின் கண்’ தலைவி கூறியது என்றது, ‘ஒருமைக் கேண்மையின் உறு குறை தான் அவள் என்னும் வேற்றுமை இல்லாத நட்பினாலே தோழி தனக்கு வந்து கூறிய குறையை; பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள் முன்னர்த் தெய்வப் புணர்ச்சி நிகழ்ந்தமை நோக்கி, அது காரணத்தான் முடிப்பதாகத் தெளிந்த தலைவி; அருமை சான்ற நால் இரண்டு வகையில் தான் முன் அருமை அமைந்து நின்ற நிலையால், தலைவன்தன்கண் நிகழ்த்திய மெய் தொட்டுப் பயிறல் முதலிய எட்டினாலே; பெருமை சான்ற இயல்பின்கண்ணும் தனக்கு உளதாம் பெருமை கூறுதற்கு அமைந்தது ஓர் இயல்பின் கண்ணும்: என்றவாறு. ’ இதனால் போந்த பொருள், ‘தலைவன் இத் துணை இளிவந்தன செய்யவும், யான் நாணும் மடனும் நீங்கிற்றிலேன்’ என்று தன் பெருமை தோழிக்குத் கூறுதலாயிற்று (19)

66
தலைவி கூற்று

வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான்,
5வீங்கு இறை வடு கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை
பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனல் அணி நல் ஊர!
அணை மென் தோள் யாம் வாட, அமர் துணைப் புணர்ந்து நீ,
10'மண மனையாய்' என வந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை?
கனலும் நோய்த் தலையும், 'நீ கனங் குழையவரொடு
புனல் உளாய்' என வந்த பூசலின் பெரிது அன்றோ
15தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்
ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை?
தணந்ததன் தலையும், 'நீ தளரியலவரொடு
துணங்கையாய்' என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
20களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை?
என ஆங்கு,
அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்,
'நீட்டித்தாய்' என்று, கடாஅம், கடுந் திண் தேர்;
25பூட்டு விடாஅ நிறுத்து

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தனது ஆற்றாமையே வாயிலாகத் தலைவி யுழைச் சென்றாற்கு, அவன் முன்பு வதுவை அயர்ந்ததூஉம், அப்பொழுது புனல் ஆடியதூஉம்,இப்பொழுது துணங்கை ஆடியதூஉம், கூறிப் புலந்தாள் தலைவி; அவள் புலந்தவாறு கண்டு, சென்று சார்ந்த தலைமகனுடன் ஊடல் தீர்கின்றாள் கூறியது (1)

67
தலைவி கூற்று

கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து,
சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம்
தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
5போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்
நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா!
புலப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கலப்பென் என்னும், இக் கையறு நெஞ்சே
10கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி,
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் எல்லா!
ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
15நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண் இன்றி வரின் எல்லா!
துனிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின்,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
20துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு?

இது வாயில் மறுத்த தலைமகள், ஆற்றாமை வாயிலாகப் புக்குக் கூடிய தலைமகனது நீக்கத்துக்கண், புக்க தோழிக்குக் கூறியது

73
தலைவி கூற்று

அகன் துறை அணி பெற, புதலொடு தாழ்ந்த
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான்,
தண் கமழ் நறுந் தேறல் உண்பவள் முகம் போல,
5வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!
'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல்வழி,
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?
10கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி,
15முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன்
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ள,
கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்?
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
20தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும்
புலத் தகைப் பெண்டிரைத் தேற்றி; மற்று யாம்எனின்,
தோலாமோ, நின் பொய் மருண்டு?

'தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, "எங்கையர்க்கு உரை" என இரத்தற்கண் தலைவி கூறியது

75
தலைவி கூற்று

'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார்,
சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும்
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து,
5ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி,
அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய்
தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
10புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின்,
வதுவை நாளால் வைகலும், அஃது யான்
நோவேன், தோழி! நோவாய், நீ' என
எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென:
'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச்
15சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென,
விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த
விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்
'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என
ஊடியிருப்பேனாயின், நீடாது,
20அச்சு ஆறாக உணரிய வருபவன்
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்
'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான்
இகலியிருப்பேனாயின், தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற
25புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும்
ஆங்க
விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்,
அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும்,
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது,
30அவ்அவ் இடத்தான் அவைஅவை காண
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவென், தோழி! கடன் நமக்கு எனவே

'தலைவன் நாள்தோறும் வதுவை அயர்ந்து வந்தால், யான் அதற்குப் பொறேனாக, நீ ஊடல் இன்றி, அவன் வந்த பொழுதே எதிர்கொள்ளுதி' என்ற தோழிக்குத் தலைமகள் அதற்குக் காரணம் கூறியது

76
தலைவி கூற்று

'புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ?' என
5வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி:
'செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய்' என்று, அவன்
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ
'கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?
10ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு,
நெடு்ங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக்
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?
'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றி,
15தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை
என ஆங்கு,
அரிது இனி, ஆயிழாய்! அது தேற்றல்; புரிபு ஒருங்கு,
20அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே,
தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோ
நாம் செயற்பாலது, இனி?

'அச்சம் நீடினும்' என்றதனால் கூட்டம் உண்மை உணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற்கு அஞ்சிய அச்சம் நீட்டித்துத் தலைவி கூறியது. இது 'திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே' என்னும் சூத்திர விதியான், மருதத்துக் குறிஞ்சி வந்தது.

77
தலைவி கூற்று

இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும்
துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்;
திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள்
அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல்,
5தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி,
மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர்
அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்:
தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக்
கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன்
10உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின்
பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்?
பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல;
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
15என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்?
மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?
20ஆங்க
'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும்,
இடையும், நிறையும் எளிதோ நிற் காணின்,
கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு
உடன் வாழ் பகை உடையார்க்கு?

பரத்தையர் சேரியில் சென்று வந்த தலைவனோடு ஊடிய தலைவி ஊடல் தீர்கின்றாள் கூறியது

79
தலைவி கூற்று

புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்
வள் இதழ் உற நீடி, வயங்கிய ஒரு கதிர்,
அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல்
5வகை பெறச் செரீஇய வயந்தகம் போல், தோன்றும்
தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்:
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி;
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்;
'தோய்ந்தாரை அறிகுவேன், யான்' என, கமழும் நின்
10சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ?
புல்லல் எம் புதல்வனை; புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்;
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ?
15கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி; நின் சென்னி
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்;
'நண்ணியார்க் காட்டுவது இது' என, கமழும் நின்
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ?
என ஆங்கு
20பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,
நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி;
ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான்
ஈங்கு எம் புதல்வனைத் தந்து

செல்லாக் காலை, 'செல்க!' எனக் கூறி விடுத்தது. அது தலைவன் இனிச் செல்லான் என்பது இடமும் காலமும் பற்றி அறிந்த காலத்து, ஊடல் உள்ளத்தால் கூடப் பெறாதாள், 'செல்க!' எனக் கூறி, விடுத்து ஆற்றுதலாம்

80
தலைவி கூற்று

நயம் தலை மாறுவார் மாறுக; மாறா,
கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்,
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப்
5பவழம் புனைந்த பருதி சுமப்ப,
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக! எம் பாக மகன்!
10கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்
தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே,
'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணுங்கால்
ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்
15தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே,
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வ நோய் யாம் காணுங்கால்
ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே,
20நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர்
அல்குல் வரி யாம் காணுங்கால்
ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும்,
போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
25தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய
கோதை பரிபு ஆட; காண்கும்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி மகனுக்கு உரைத்தது

82
தலைவி கூற்று


தலைவி

ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு,

காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை

பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை;

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு

5

புக்க வழி எல்லாம் கூறு


தோழி

கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்

காயாமை வேண்டுவல், யான்


தலைவி

காயேம்.

தோழி கூற்றும், தலைவி புதல்வனைக் கடிதலும்

10

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மருப்புப் பூண் கையுறையாக அணிந்து,

'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர்

15

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,

முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,

'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,

20

வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,

ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்

பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்;

அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்

தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்

25

புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு

கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா!

வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்

பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,

தொடியும் உகிரும் படையாக நுந்தை

30

கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,

வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி;

அன்ன பிறவும், பெருமான் அவள்வயின்

துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ

ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்

35

கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;

அமைந்தது, இனி நின் தொழில்


புத்தேளிர் கோட்டம் வலம் செய்வித்துக்கொண்டு வருதற்குச் சேடியருடன் மகற்போக்கிய தலைமகள்,அவன் நீட்டித்து வந்தவழி, 'தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உன்னிய வழி'யால், தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது (17)

83
தலைவி கூற்று


தலைவி தன் புதல்வனுடன் சென்ற தோழி நீட்டித்து வந்தமை பற்றி வினாவுதல்

பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை,

பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர,

இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்

விளையாட்டிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய்,

5

உளைவு இலை; ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம்

நீட்டித்த காரணம் என்?


தோழியின் மறுமொழி

கேட்டீ

பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக்

குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும்

10

பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண்,

அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு

நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல்,

சாலகத்து ஒல்கிய கண்ணர், 'உயர் சீர்த்தி

ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக்

15

கால்கோள்' என்று ஊக்கி, கதுமென நோக்கி,

திருந்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,

'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு

ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச்

செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா

20

எம்மொடு சேர்ந்து சென்றீவாயால்; செம்மால்!

நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த

புலம்பு எலாம் தீர்க்குவேம் மன்' என்று இரங்குபு,

வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத

கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி,

25

ஒள்ளிழாய்! யான் தீது இலேன்


தலைவி தன் புதல்வனைக் கடிந்தும், அப்பொழுது அங்குவந்த தலைவனொடு புலந்தும் கூறுதல்

எள்ளலான், அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு

எம் இல் வருதியோ? எல்லா! நீ தன் மெய்க்கண்

அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,

முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை

30

வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு

தந்தையும் வந்து நிலை


விளையாட்டிக்கொண்டு வரற்குச் சேடியரோடு மகற் போக்கிய தலைவி, அவன் நீட்டித்துவந்தவழி, 'தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளியவழி,'சிறைப்புறமாகக் கேட்டு வந்த தலைவனைக் கண்டு, அவள் தன்னுள்ளே புலந்தது

84
தலைவி கூற்று


தலைவி தோழியை வினாவுதல்

உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்

நறு வடி ஆர் இற்றவை போல் அழிய,

கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்

சுரந்த என் மெல் முலைப் பால் பழுதாக நீ

5

நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!

கடவுட் கடி நகர்தோறும் இவனை

வலம் கொளீஇ வா' என, சென்றாய் விலங்கினை

ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்

யார் இல் தவிர்ந்தனை? கூறு


தோழி கூறிய செய்தி உணர்ந்து, தலைவி நெஞ்சொடு கிளத்தல்

10

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட

குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,

'இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா

மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல்நகர்

வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்

15

தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்

தம்தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,

ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார் 'பிறன் பெண்டிர்

ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன்; சீத்தை,

செறு தக்கான் மன்ற பெரிது'


தலைவி புதல்வனொடு புலந்து உரைத்தல்

20

சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட,

மோதிரம் யாவோ? யாம் காண்கு

அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்

சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்

குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்

25

செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்' என்பது தன்னை

அறீஇய செய்த வினை

அன்னையோ? இஃது ஒன்று

முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர்,

30

வெந்த புண் வேல் எறிந்தற்றா, இஃது ஒன்று

தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண்

தந்தார் யார், எல்லாஅ! இது?

'இஃது ஒன்று என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு' என்னும்

தன் நலம் பாடுவி, தந்தாளா நின்னை,

35

'இது தொடுக' என்றவர் யார்


தலைவி தன் நெஞ்சு அழிந்து கூறுதல்

அஞ்சாதி; நீயும் தவறிலை; நின் கை இது தந்த

பூ எழில் உண்கண் அவளும் தவறிலள்;

வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?

மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள்

40

தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன்

யானே தவறுடையேன்!


கடவுட் கடி நகர்தோறும் வலங் கொளீஇ வரற்குச் சேடியரோடு மகற் போக்கிய தலைவி அவன் நீட்டித்து வந்துழி, ' தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளியவழி'யின்கண், தந்தை தொடி மகன் கைக் கண்டு புலந்தாள் தன்னுள்ளே அழிந்து கூறியது (19)

85
தலைவி கூற்று

காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு

பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி

உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொல்ங் காழ்; மேல்

மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல்

5

தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை

கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய

பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த,

10

பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்

மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்

சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு

ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல்

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,

15

அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண,

சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை

ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின்

செல்வு உறு திண் தேர்க் கொடுஞ் சினைக் கைப்பற்றிப்

பைபயத் தூங்கும் நின் மெல் விரற் சீறடி

20

நோதலும் உண்டு; ஈங்கு என் கை வந்தீ,

செம்மால்! நின் பால் உண்ணிய

பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத்

தூண்டிலா விட்டுத் துடக்கி, தான் வேண்டியார்

நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும்

25

நுந்தைபால் உண்டி, சில

நுந்தை வாய் மாயச் சூள் தேறி, மயங்கு நோய் கைமிக,

பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா

ஞாயர்பால் உண்டி, சில

அன்னையோ! யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத்

30

தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை

வருக என்றார், யார்கொலோ, ஈங்கு?

என் பால் அல் பாராட்டு உவந்தோய்! குடி; உண்டீத்தை; என்

பாராட்டைப்பாலோ சில

செருக் குறித்தாரை உவகைக் கூத்தாட்டும்

35

வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை

தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்


தலைவி தன் மகனைப் பாராட்டி, பால் கூறிட்டு ஊட்டுகின்றவழி, சிறைப்புறமாகக் கேட்டுப் புக்க தலைவனைக் கண்டு, தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது.

86
தலைவி கூற்று

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,

கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ,

பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட

நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய்

5

கலந்து கண் நோக்கு ஆர, காண்பு இன் துகிர்மேல்

பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப,

கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,

தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த

தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்

10

போர் யானை, வந்தீக, ஈங்கு!

செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை

நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;

கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்

வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

15

'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல்,

மென் தோள் நெகிழ விடல்

பால் கொளல் இன்றி, பகல் போல், முறைக்கு ஒல்காக்

கோல் செம்மை ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தைபோல்,

20

சால்பு ஆய்ந்தார் சாய விடல்

வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு

ஈதல்மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,

மாதர் மென் நோக்கின் மகளிரை, நுந்தைபோல்,

நோய் கூர நோக்காய் விடல்


பின்னே மறைய நின்ற தலைவனைத் தலைவி கண்டமை

25

ஆங்க

திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்

மகன் அல்லான் பெற்ற மகன்?

மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்


தலைவன் உரையும், அப்பொழுது தலைவன் மார்பில் பாய்ந்த புதல்வன் செயல் கண்டு, தலைவி உரைத்தலும்

'ஆயிழாய்! தாவாத எற்குத் தவறு உண்டோ? காவாது ஈங்கு

30

ஈத்தை, இவனை யாம் கோடற்கு' சீத்தை; யாம்

கன்றி அதனைக் கடியவும், கை நீவி,

குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு,

தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா

அன்பிலி பெற்ற மகன்


'தந்தையார் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தம் இல் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்' என்பதனால், மகனைத் தலைவனை ஒக்கலாம் குணனும் ஒக்கலாகாக் குணனும் தலைவி கூறுகின்றுழி,மறைந்து புக்க தலைவன் அவள் ஊடல் உணர்வன சொல்ல, மகன் வாயிலாக ஊடல் தீர்வாள் தன்னுள்ளே கூறியது (21)

87
தலைவி கூற்று


தலைவி

ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை

வெரூஉதும், காணுங்கடை


தலைவன்

தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய்,

மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு?


தலைவி

5

ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்;

இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;

நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப்

புலப்பார் உடையர், தவறு


தலைவன்

அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி;

10

காயும் தவறு இலேன் யான்


தோழி

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது

நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின்

ஊடுதல் என்னோ, இனி?


தலைவி நெஞ்சொடு கூறல்

'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்

15

தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப்

பாடு இல் கண் பாயல் கொள


பரத்தையர் சேரி் சென்றமை அறிந்திலள் எனத் தலைவிமாட்டுச் சென்றவனோடு அவள் ஊடி உறழ்ந்து கூறி, தோழி வாயிலாக ஊடல் தீர்வாள், தன் நெஞ்சொடு கூறியது

88
தலைவி கூற்று


தலைவி

ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற

முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக,

தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு

அடியரோ ஆற்றாதவர்?


தலைவன்

5

கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று?


தலைவி

வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது. கூறு நின்

மாயம், மருள்வாரகத்து


தலைவன்

ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா

என்கண் எவனோ, தவறு?


தலைவி

10

இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல்,

வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,

ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்

சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,

தவறாதல் சாலாவோ? கூறு


தலைவன்

15

'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை

தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு


தலைவி

இனித் தேற்றேம் யாம்

தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்

தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி,

20

நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி

யார் மேல்? விளியுமோ? கூறு


அவ் ஆற்றால் புக்க தலைவனுடன் ஊடியும் உறழ்ந்தும் சொல்லி, பொய்ச் சூள் அஞ்சி, ஊடல் தீர்ந்தது

95
தலைவி கூற்று


தலைவி

நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி,
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி, நின் ஆங்கே, நின் சேவடி சிவப்ப

தலைவன்

5செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது

தலைவி

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;
புதுவன ஈகை வளம் பாடி, காலின்
10பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
தபுத்த புலர்வில் புண்
ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
15தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு,
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரமாய்விட்டன புண்
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
20துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு

தலைவன்

ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய, நின் மெய் தொடுகு

தலைவியின் இகழ்ச்சியும் தலைமகன் மாற்றமும்

25'அன்னையோ!' 'மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று
அறிகல்லாய் போறிகாண், நீ
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி'

'அருள்' என்ற தலைவனுக்குத் தலைவி

அருளுகம் யாம்; யாரேம், எல்லா! தெருள?
30அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்
விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்

'கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது, நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ, பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரைப் பூழ் ஆக்கிக் கூறியது

96
தலைவி கூற்று


தலைவி, 'யாங்குச் சென்று வந்தாய்' என, தலைவன் உரைத்த பதில்

'ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய்ச் சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்?' 'கேள் இனி:
5ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்!
குதிரை வழங்கி வருவல்'

தலைவி

அறிந்தேன், குதிரைதான்;
பால் பிரியா ஐங்கூந்தற் பல் மயிர்க் கொய் சுவல்,
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
10நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்
ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறையாகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகை,
15தார் மணி பூண்ட தமனிய மேகலை,
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி, ஆர்ப்ப இயற்றி, நீ
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள்,
20ஆதிக் கொளீஇ, அசையினை ஆகுவை,
வாதுவன்; வாழிய, நீ!
சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க்கண்
குதிரையோ, வீறியது?
25கூர் உகிர் மாண்ட குளம்பினது; நன்றே
கோரமே வாழி! குதிரை
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க்கண்
குதிரையோ, கவ்வியது?
30சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே
வியமமே வாழி! குதிரை
மிக நன்று, இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை;
பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
35ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர்
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி
உரு அழிக்கும், அக் குதிரை; ஊரல், நீ; ஊரின், பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச் சார்த்
திரி; குதிரை ஏறிய செல்

'கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது, நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ,பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரைக் குதிரையாக்கிக் கூறியது

97
தலைவி கூற்று


தலைவி

அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ
என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான்
சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த
அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,
5'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல்

தலைவன்

முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்
புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்

'புதிய யானை காணத் தங்கினேன்' என்ற தலைவனுக்குத் தலைவி

ஒக்கும்
அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்:
10அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு
ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை,
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு,
தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி,
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து
15முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து,
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,
தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,
தொடர் தொடராக வலந்து; படர் செய்யும்
மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார்
20நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை
இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ?
எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித்
தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ
குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா,
25உவா அணி ஊர்ந்தாயும் நீ
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்
நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ
சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்
சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல,
30விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை
கடாஅம் படும்; இடத்து ஓம்பு

'கொடியோர் கொடுமை சுடும் என .............. பகுதியின் நீங்கிய தகுதிக்கண்' தலைவி பரத்தையரை யானையாகக் கூறிப் புலந்தது.

98
தலைவி கூற்று


தலைவி

யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்
மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர,
5பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம்
கேட்டும் அறிவேன்மன், யான்

தலைவன்

தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும்
10பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை
வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?

தலைவி

ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,
15மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக,
கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம்,
நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
யாணர்ப் புதுப் புனல் ஆடினாய், முன் மாலை,
பாணன் புணையாகப் புக்கு
20ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி,
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே
போர்த்த சினத்தான் புருவத் திரை இடா,
ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச்
25சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு,
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க,
புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூஉம் இலை

தலைவன்

30நிரைதொடீஇ! பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன்
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?

தலைவி

மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல்
35பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக்
களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் ஆற்றாமையே வாயிலாகச் சென்றுழி, அவனைக் கண்டு, 'நீ தாழ்த்த காரணம் என்?' என, 'புதுப் புனல் ஆடித் தாழ்த்தது' என்ன, தலைவி, 'இன்ன புதுப் புனலே ஆடியது' என நெருங்கிக் கூறியது

104
தோழி கூற்றும் தலைவி கூற்றும்



மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
5தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
10திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
15பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ
அவ் வழி, 'முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்
20ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின்
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான். வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
25சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி
அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப,
30குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
35பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்
இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க,
40வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன்
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்
45தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று,
தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,
மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை, 'ஒவ்வான்' எனப் பெயரும்
50மீளி மறவனும் போன்ம்
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
55பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர்,
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ
60தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர்,
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ

தலைவியையும் ஆயத்தையும் தன்னுடன் பாடத் தோழி அழைத்தல்

பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு

தலைவி

65நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்,
செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள், ஆயர் மகள்
தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
70அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல்,
'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும்
தருக்கு அன்றோ ஆயர் மகன்?

தோழி

நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
75ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த
ஊராரை உச்சி மிதித்து
ஆங்கு,
தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
80ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே

'நாடக வழக்கினும்' என்னும் சூத்திரத்து, 'பாடலுள் அமையாத' என்றதனால்,ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்கு காட்டிக் கூறி, 'இக் குரவையுள் அவனைப் பாடுகம் வா' என்றாட்கு, அவள் உடம்பாட்டினுள், தான் அலர் அச்சம் நீங்கினமையும், அவவன் தன்னை வருத்தினமையும், கூறிப் பாடிப், பின்னர், தோழி, 'நமர் அவற்கு நின்னைக் கொடை நேர்ந்தார்' எனக் கூறியது (4)

105
தோழி கூற்றும் தலைவி கூற்றும்


ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்

அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
5ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி,
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
10தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
15அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும்,
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்,
கால முன்பின் பிறவும், சால
20மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும்,
தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ
அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
25ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க,
நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து
30மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும்,
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு
35கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி,
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக்
40கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா
45வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப்
போதரும் பால் மதியும் போன்ம்!
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ

தோழி தன் நெஞ்சோடு தலைவி விரும்பக் கூறியது

50வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில்
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,
பாடு இல, ஆய மகள் கண்

தலைவியை நோக்கித் தோழி கூறுதல்

நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர,
சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,
55ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட
கொல் ஏறு போலும் கதம்?
நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்:
கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
60தம் கண் பொடிவது எவன்?

தலைவி

ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
65அலர் செய்து விட்டது இவ் ஊர்?
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்!
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன்
மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு?

தோழி

70என,
பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியாற் பரவுதும் 'நாடு கொண்டு,
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
75இமையத்து உம்பரும் விளங்குக!' எனவே

ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி, அவள் ஏறு தழுவிய தலைவனை விருப்பொடு நோக்கியவாற்றைத் தன்னுள்ளே கூறி, முன்னர்க் களவின்கண் தமர் கோபித்ததனையும் அயலார் பொறாதிருந்த தன்மையினையும் தலைவிக்குக் கூற, அவளும், 'அவர் அலர் கூறியது நன்று' என்று கூறி,'அன்றே என் நெஞ்சு கலந்து விட்டது; இனி அவர் கொடுப்பதாகக் கூறிய நாளில் செய்வது என்?' என மகிழ்ந்துகூற, அது கேட்ட தோழி, 'யாம் அங்ஙனம் கூடி இனிது இருக்குமாறு காக்கின்ற பாண்டியன் நீடு வாழுமாறு தெய்வத்தைப் பரவுகம் வா' எனக் கூறியது (5)

111
தலைவி கூற்று

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
5 புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
10 "பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
15 பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
20 சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்

தலைவி ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவு கடாவி, யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது

114
தலைவி கூற்று


தலைவி

வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா
5ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ
தோழி! அவனுழைச் சென்று

தோழி

சென்று யான் அறிவேன்; கூறுக, மற்று இனி

தலைவி

'சொல் அறியாப் பேதை' மடவை! 'மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
10நினக்கு வருவதாக் காண்பாய்'. அனைத்தாகச்
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
15வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
20அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

'ஆங்கு அதன் புறத்துப் புரைபட வந்த, மறுத்தலொடு தொகைஇ' என்பது, அவன் வரைவு வேண்டின இடத்து, அவ் வரைவு புறத்ததாகிய வழி, தலைவி தன் உயர்வு உண்டாகத் தோன்றிய மறுத்தலோடே முன் கூறியவற்றைத் தொகுத்து' என்று பொருள் கூறி, 'அதன் புறம் எனவே, அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவு ஆயிற்று' என்றாம். உயர்வு குடிப் பிறப்பும் கற்பும்; அதற்கு ஏற்ப, 'பிறர் வரைவு மறுத்து, தலைவன் வரையுமாறு நீ கூறு' எனத் தோழிக்குக் கூறியது (14)

115
தலைவி கூற்றும் தோழி கூற்றும்

'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
5முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ
10அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள்,
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
15பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா!
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
20வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்,
அல்கலும் சூழ்ந்த வினை.'

தலைவி, 'களவு வெளிப்பட்டது' என்று அஞ்சி, தோழிக்குச் சொல்ல, 'நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்' எனச் சொல்லி, அச்சம் நீக்கியது

117
தலைவன் கூற்றும் தலைவி கூற்றும்


கையில் உள்ளது யாது?' எனத் தலைவியைத் தலைவன் வினாவுதல்

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ,
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
5கையது எவன்? மற்று உரை

தலைவியின் விடையும் தலைவன் வினாவும்

'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள?
காண் தக்காய்! எற் காட்டிக் காண்.'

தலைவி

10காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை

தலைவன்

முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்!
எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
15மெல்லியது, ஓராது அறிவு

ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது

118
தலைவி கூற்று

வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,
நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அற, தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
5ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன்
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்ப,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!
மாலை நீ தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த
10போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்;
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூப் போல் தளை விட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்
மாலை நீ தையெனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;
15செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்,
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்
மாலை நீ தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்ப,
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;
தகை மிக்க புணர்ச்சியார், தாழ் கொடி நறு முல்லை
20முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்
என ஆங்கு
மாலையும் அலரும் நோனாது, எம்வயின்
நெஞ்சமும் எஞ்சும்மன் தில்ல எஞ்சி,
உள்ளாது அமைந்தோர், உள்ளும்,
25உள் இல் உள்ளம், உள்உள் உவந்தே

பிரிவிடை ஆற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு, அதனொடு புலம்பி, தோழி கேட்ப,அதனொடு புலந்தது

119
தலைவி கூற்று

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப்
பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர,
5கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த,
சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென,
பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின்
10கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,
மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
15காலை ஆவது அறியார்,
மாலை என்மனார், மயங்கியோரே

பிரிவிடை மாலைப் பொழுது கண்டு ஆற்றாத தலைவி தோழிக்கு உரைத்தது.

122
தலைவி கூற்று

'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற,
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப,
காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி,
சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை;
5பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை;
அலவலை உடையை' என்றி தோழீ!
கேள், இனி:
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
10பேணி அவன் சிறிது அளித்தக்கால், என்
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்
இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
அருளி அவன் சிறிது அளித்தக்கால், என்
15மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்
20அதனால்,
யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம்
தான் அவர்பால் பட்டதாயின்,
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே

'காமம் சாலா இளமையோள்வயின்' பின் களவொழுக்கம் ஒழுகிய தலைவன் இடையிட்டுப் பிரிந்து,தொன் முறை மனைவியரொடு புணர்ச்சி எய்தி இருந்தானாக, அதனை அறிந்து ஆற்றாளாய தலைவி ஆற்றாமையைக் கண்டு வினாய தோழிக்கு, அத் தலைவி அவன் ஒழுகுகின்றவாறும், தன் நெஞ்சு அவன் வயத்தது ஆயவாறும்,கூறியது. 'மறையின் வந்த மனையோள் செய்வினை, பொறை இன்று பெருகிய பருவரற்கண்னும்'என்பதனாலும், 'பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை' என்னும் சூத்திரத்தானும் உணர்க. (5)

123
தலைவி கூற்று

கருங் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இருந் தும்பி இயைபு ஊத,
ஒருங்குடன் இம்மென இமிர்தலின், பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல்,
5பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல்
காணாமை இருள் பரப்பி, கையற்ற கங்குலான்,
மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ? காணாயோ? மட நெஞ்சே!
கொல் ஏற்றுச் சுறவினம் கடி கொண்ட மருள் மாலை,
10அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே!
வெறி கொண்ட புள்ளினம் வதி சேரும் பொழுதினான்,
செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே!
15என ஆங்கு
எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ,
இருங் கழி ஓதம் போல் தடுமாறி,
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!

காப்பு மிகுதிக்கண் ஆற்றாத தலைவி தலைவன்பால் சென்ற நெஞ்சினை நோக்கி அழிந்து கூறியது

128
தலைவி கூற்று

'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று,
வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது,
5அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும்
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல,
புதுவது கவினினை' என்றியாயின்,
நனவின் வாரா நயனிலாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:
10'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என்
நலம் தாராயோ?' என, தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி,
'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும்
'முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,
15நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்,
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என,
தலையுற முன் அடிப் பணிவான் போலவும்
கோதை கோலா, இறைஞ்சி நின்ற
ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
20'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே,
'பேதையைப் பெரிது' எனத் தெளிப்பான் போலவும்
ஆங்கு
கனவினால் கண்டேன் தோழி! 'காண் தகக்
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
25நனவின் வருதலும் உண்டு' என
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே

வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியது கவின் கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது

137
தலைவி கூற்று

அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்;
பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே;
பலவே யாமம்; பையுளும் உடைய;
சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்;
5அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து,
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்
அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே
மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம்
சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை
10வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை!
வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்,
நகை முதலாக, நட்பினுள் எழுந்த
தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை
15வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக,
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை!
பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய்,
நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம்
சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப்
20பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த்
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை!
தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்
ஆங்கு
அன்னர் காதலராக, அவர் நமக்கு
25இன் உயிர் பேர்த்தரும மருத்துவர் ஆயின்,
யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின்,
நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே

வரைவு நீட ஆற்றாளாயின இடத்து, தலைவி ஆற்றாமையை அவள்தன்னாலே தலைவற்கு அறிவிக்கல் உற்ற தோழி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியை வற்புறுக்க, அவள் வன்புறை எதிர் அழிந்து கூறியது

142
கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை,
அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண்,
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது,
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
5பயன் இன்று மன்றம்ம, காமம் இவள் மன்னும்
ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்,
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல்
10மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே,
பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண்கண்
ஆய் இதழ் மல்க அழும்
ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்;
காண்பாம் கனங்குழை பண்பு
15என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ?
நல்ல நகாஅலிர் மற்கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லிப் புணரப் பெறின்
'எல்லா! நீ உற்றது எவனோ மற்று?' என்றீரேல், 'எற் சிதை
20செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்?
கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று
25நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று
மாண் மலர்க் கொன்றையவன்?
'தெள்ளியேம்' என்று உரைத்து, தேராது, ஒரு நிலையே,
30'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலியுறீஇ,
உள்ளி வருகுவர்கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால்,
தோன்றினனாக, தொடுத்தேன்மன், யான்; தன்னைப்
35பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய
கையுளே, மாய்ந்தான், கரந்து
கதிர் பகா ஞாயிறே! கல் சேர்திஆயின்,
அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித்
தருகுவைஆயின், தவிரும் என் நெஞ்சத்து
40உயிர் திரியா மாட்டிய தீ
மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின்,
பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை,
கைவிளக்காகக் கதிர் சில தாராய்! என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு
45சிதைத்தானைச் செய்வது எவன்கொலோ? எம்மை
நயந்து, நலம் சிதைத்தான்
மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ
தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ?
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன்
50நன்று தீது என்று பிற
நோய் எரியாகச் சுடினும், சுழற்றி, என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோய் உறு வெந் நீர்: தெளிப்பின், தலைக் கொண்டு
வேவது, அளித்து இவ் உலகு
55மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின் சான்றீர்!
நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை
நலியும் விழுமம் இரண்டு
எனப் பாடி,
60இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்;
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல்லிரா
நல்கிய கேள்வன் இவன் மன்ற, மெல்ல
மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம்
கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
65கலங்கிய நீர்போல் தெளிந்து, நலம் பெற்றாள்,
நல் எழில் மார்பனைச் சார்ந்து

'பொழுது தலை வைத்த கையறு காலை, இறந்த போலக் கிளக்கும் கிளவி, மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு, அவை நாற் பொருட்கண் நிகழும் என்ப.' இச்சூத்திரம்,' பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' என்ற சிறப்புடைப் பெருந்திணை அன்றி, பெருந்திணைக் குறிப்பாகக் கந்தருவத்துட்பட்டு வழுவி வரும் 'ஏறிய மடல் திறம்' முதலிய நான்கனுள் ஒன்றாய்,முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழுவி வந்த 'தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்' ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. ஓதலும் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாண் எதிரும் பிரிவும், முடியுடை வேந்தர்க்கும் அவர் ஏவலின் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின்,அப் பிரிவில் பிரிகின்றான், 'வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்பதால், கற்புப் போல நீ இவ்வாறு ஒழுகி, யான் வருந்துணையும் ஆற்றி இரு' என ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணம் அன்மையின், வாளா பிரியும் அன்றே? அங்ஙனம் பிரிந்துழி, அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்கும் தோழிக்கும் ஆற்றுவித்தல் அரிதுஆகலின், அவட்கு அன்பு இன்றி நீங்கினான் என்று, ஆற்றாமை மிக்கு ஆண்டுப் பெருந்திணைப் பகுதி நிகழும் என்று உணர்க. (இதன் பொருள்): பொழுது அந்திக் காலத்தே: கையறு காலை ' புறம் செயச் சிதைத்தல்' என்னும் சூத்திரத்தில், 'அதனின் ஊங்கு இன்று' எனக் கூறிய கையறவு உரைத்தல் என்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே; தலை வைத்த அந்த ஆறாம் அறுதியின் இகந்தனவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; மிகுதியொடு மடனே வருத்தம் மருட்கை நாற் பொருட்கண் நிகழும் தன் வனப்பு மிகுதியுடனே மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் ஆகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; அவை இறந்த போலக் கிளக்கும் கிளவிஎன்ப அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் கூற்று நிகழுங்கால், தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழும் என்று கூறுவர் புலவர் என்றவாறு. தலை வைத்த மெய்ப்பாடு ஆவன: 'ஆறாம் அறுதியினும் ஒப்பத் தோன்றுதற்கு உரிய மெய்ப்பாடுகளாய் மன்றத்து இருந்த சான்றோர் அறிய, தன் துணைவன் பெயரும், பெற்றியும்,அவனொடு புணர்ந்தமையும், தோன்றக் கூறியும், அழுதும், அரற்றியும், பொழுதொடு புலம்பியும், ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும், பிறவும் ஆம்' என்னும் விதி பற்றி வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழி, தலைவி பிரிவு ஆற்றகில்லாது நாணு வரை இறந்து கலங்கி மொழிந்து அறிவு அழிந்துழி, அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று என்று கூறியது. (25)

143
கண்டார் கூற்றும் தலைவி கூற்றும்

'அகல் ஆங்கண், இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின்,
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று
நல் நுதல் நீத்த திலகத்தள், "மின்னி
மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல்
5கணிகாரம் கொட்கும்கொல்?" என்றாங்கு அணி செல
மேனி மறைத்த பசலையள், ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா,
அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது ஒத்தி
என் செய்தாள்கொல்?' என்பீர்! கேட்டீமின் பொன் செய்தேன்
10மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,
அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
நிறை உடையேன் ஆகுவேன்மன்ற மறையின் என்
15மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண்
சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு
'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே,
'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ
மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின்
20இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று?
'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார்கண்
கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
25அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை
ஒழிய விடாதீமோ என்று
அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
30யாஅம் தளிர்க்குவேம்மன்
நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல
35பல வல்லன் தோள் ஆள்பவன்
நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப;
இனையும் என் நெஞ்சம்போல், இனம் காப்பார் குழல் தோன்ற;
சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப;
போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய;
40காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை
மாலையும் வந்தன்று, இனி
இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்;
அருள் இலை; வாழி! சுடர்!
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின்,
45மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின்,
யாண்டும், உடையேன் இசை,
ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப்
பீர் அலர் போலப் பெரிய பசந்தன
50நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று,
பேர் அஞர் செய்த என் கண்
தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ
இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்
55என் உயிர் காவாதது?
என ஆங்கு,
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர,
தென்னவற் தெளித்த தேஎம் போல,
60இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே

இதுவும் அது

144
கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

நன்னுதாஅல்! காண்டை: நினையா, நெடிது உயிரா,
என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல் மாண்
நகுதரும் தன் நாணுக் கைவிட்டு, இகுதரும்
கண்ணீர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி,
5அன்ன இடும்பை பல செய்து, தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல்:
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ, சென்று?
'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்?
10நின் உற்ற அல்லல் உரை' என, என்னை
வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்: ஒருவன்,
'குரற்கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று,
மருவு ஊட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு
15மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு
எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்!
எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ?
20காட்டீயாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்;
வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய்எனின்
என்று, ஆங்கே, உள் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு
25வெண் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக்
கண்ணோடினாய் போறி, நீ
நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள்
ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்; பொழில்தொறும்
நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்?
30ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக் காண், எம்
கோதை புனைந்த வழி
உதுக் காண் சாஅய் மலர் காட்டி, சால்பிலான், யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடியுழி
உதுக் காண் தொய்யில் பொறித்த வழி
35உதுக் காண் 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறனில்லான்
பைய முயங்கியுழி
அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து,
விளியா நோய் செய்து, இறந்த அன்பிலவனைத்
தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும்
40வளியே! எதிர்போம் பல கதிர் ஞாயிற்று
ஒளி உள்வழி எல்லாம் சென்று; முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ;
காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என்
கண்ணீர் அழலால் தெளித்து
45பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின்
பிறங்கு இரு முந்நீர்! வெறு மணலாகப்
புறங்காலின் போக இறைப்பேன்; முயலின்,
அறம் புணையாகலும் உண்டு
துறந்தானை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று
50பாடுவேன், என் நோய் உரைத்து
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்
எல்லி ஆக, 'எல்லை' என்று, ஆங்கே, பகல் முனிவேன்;
எல்லிய காலை இரா, முனிவேன்; யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்
55ஓஒ! கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து,
'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்
செய்யும், அறனில்லவன்
ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடுந் தீயுள்
60நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ
நீருள் புகினும், சுடும்
ஓஒ! கடலே! 'எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்?' என்று, இந் நோய்
உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே
65இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு
ஆங்கு
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர,
கெடல் அருங் காதலர் துனைதர, பிணி நீங்கி,
70அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் படக் கெட்டாங்கு,
இல்லாகின்று, அவள் ஆய் நுதல் பசப்பே

இதுவும் அது

145
கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

'துனையுநர் விழை தக்க சிறப்புப்போல், கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும்
கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி
உயிர்க்கும்; உசாஅம்; உலம்வரும்; ஓவாள்,
5கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார,
பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற,
பல ஒலி கூந்தலாள், பண்பு எல்லாம் துய்த்துத்
துறந்தானை உள்ளி, அழூஉம்; அவனை
மறந்தாள்போல் ஆலி நகூஉம்; மருளும்;
10சிறந்த தன் நாணும் நலனும் நினையாது,
காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண,
நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது,
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்,
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்,
15ஊழ் செய்து, இரவும் பகலும்போல், வேறாகி,
வீழ்வார்கண் தோன்றும்; தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்
தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி
20வறந்து என்னை செய்தியோ,வானம்? சிறந்த என்
கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ,
கொண்மூக் குழீஇ முகந்து?
நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம்
கண்பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த
25பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே!
எல்லாக் கதிரும் பரப்பி, பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின்,
புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக்
30கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான்
செல்லாது நிற்றல் இலேன்
ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலைநாள்,
போதரின் காண்குவேன்மன்னோ பனியொடு
மாலைப் பகை தாங்கி, யான்?
35இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி
ஒள் வளை ஓடத் துறந்து, துயர் செய்த
கள்வன்பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி
பெருங் கடல் புல்லென, கானல் புலம்ப,
இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற,
40விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான்,
யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்;
தான் வேண்டுபவரோடு துஞ்சும்கொல், துஞ்சாது?
வானும், நிலனும், திசையும், துழாவும் என்
ஆனாப் படர் மிக்க நெஞ்சு
45ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என்
ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ
நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப,
அளி புறம் மாறி, அருளான் துறந்த அக்
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
50எல்லாரும் தேற்றர், மருந்து
வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்!
எனைத்தானும் எள்ளினும், எள்ளலன், கேள்வன்;
நினைப்பினும், கண்ணுள்ளே தோன்றும்; அனைத்தற்கே
ஏமராது, ஏமரா ஆறு
55கனை இருள் வானம்! கடல் முகந்து, என்மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும், ஒருங்கே
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்றுத் தீ
எனப் பாடி,
60நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி,
'யாவிரும் எம் கேள்வற் காணீரோ?' என்பவட்கு,
ஆர்வுற்ற பூசற்கு அறம்போல, ஏய்தந்தார்;
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு,
மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர,
65ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என்
ஆயிழை உற்ற துயர்

இதுவும் அது

146
கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே
வரை நில்லா விழுமம் உறீஇ, நடுக்கு உரைத்து, தெறல் மாலை
அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர,
அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன்
5துன்னி அகல, துறந்த அணியளாய்,
நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு,
பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந் நீர் தன்,
கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர,
தேர் வழி நின்று தெருமரும்; ஆயிழை
10கூறுப கேளாமோ, சென்று?
'எல்லிழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று,
உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது
கேட்டீமின், எல்லீரும் வந்து
வறம் தெற மாற்றிய வானமும் போலும்;
15நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும்
சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து,
என்மேல் நிலைஇய நோய்
'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும்
தக்கவிர் போலும்! இழந்திலேன்மன்னோ
20மிக்க என் நாணும், நலனும், என் உள்ளமும்,
அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன!
உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக,
செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்
நக்கது, பல் மாண் நினைந்து
25கரை காணா நோயுள் அழுந்தாதவனைப்
புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்!
வரைபவன் என்னின் அகலான் அவனை,
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்,
நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும்
30உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான்
யாண்டு ஒளிப்பான்கொல்லோ மற்று?
மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும்
மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி
யாமம் தலை வந்தன்றுஆயின், அதற்கு என் நோய்
35பாடுவேன், பல்லாருள் சென்று
யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும்
யாமம்! நீ துஞ்சலைமன்
எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின்,
40கதிர்கள் மழுங்கி, மதியும் அதிர்வது போல்
ஓடிச் சுழல்வதுமன்
பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே!
நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்
கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது
45போலாது, என் மெய்க் கனலும் நோய்
இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,
வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்;
அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி,
பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச்
50செல்வேன், விழுமம் உழந்து
என ஆங்குப் பாட, அருள் உற்று,
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன்
நல் எழில் மார்பன் முயங்கலின்,
55அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே

இதுவும் அது

147
கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய,
தேறுகள் நறவு உண்டார் மயக்கம்போல், காமம்
வேறு ஒரு பாற்று ஆனதுகொல்லோ? சீறடிச்
சிலம்பு ஆர்ப்ப, இயலியாள் இவள் மன்னோ, இனி மன்னும்
5புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக,
வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன்
தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு,
ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன்
நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே
10பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்: தோழி! ஓர்
ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ?
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ? ஓஒ!
அமையும் தவறிலீர் மற்கொலோ நகையின்
மிக்கதன் காமமும் ஒன்று என்ப; அம் மா
15புது நலம் பூ வாடியற்று, தாம் வீழ்வார்
மதி மருள நீத்தக்கடை
என்னையே மூசி, கதுமென நோக்கன்மின் வந்து
கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர்
சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை
20விலை வளம் மாற அறியாது, ஒருவன்
வலை அகப்பட்டது என் நெஞ்சு
வாழிய, கேளிர்!
பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை
முலையிடை வாங்கி முயங்கினன், நீத்த
25கொலைவனைக் காணேன்கொல், யான்?
காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி,
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே! எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல்,
வானத்து எவன் செய்தி, நீ?
30ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல,
நீருள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ் வழித்
தேரை தினப்படல் ஓம்பு
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை,
பல் கதிர் சாம்பிப் பகல் ஒழிய, பட்டீமோ
35செல் கதிர் ஞாயிறே! நீ
அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும்
பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான்
கறாஅ எருமைய காடு இறந்தான்கொல்லோ?
உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான்கொல்லோ?
40செறாஅது உளனாயின், கொள்வேன்; அவனைப்
பெறாஅது யான் நோவேன்; அவனை எற் காட்டிச்
சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும்,
உறாஅ அரைச! நின் ஓலைக்கண் கொண்டீ,
மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று;
45அறாஅ தணிக, இந் நோய்
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல், யாவர்க்கும்
அன்னவோ காம! நின் அம்பு?
கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்;
50ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல்
ஒய்யெனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை
மெய்யாகக் கள்வனோ என்று
வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும்
மடாஅ நறவு உண்டார் போல, மருள
55விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு
கனவினான் காணிய, கண் படாஆயின்,
நனவினான், ஞாயிறே! காட்டாய் நீஆயின்,
பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன்
60கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு
என ஆங்கு,
கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்;
தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்;
அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல்
65மெல் நடைப் பேடை துனைதர, தற் சேர்ந்த
அன்ன வான் சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல்
காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை
நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி,
70தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக,
நல் எழில் மார்பனகத்து

இதுவும் அது.