10
தோழி கூற்று

வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்,
சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி,
யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,
வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின்,
5அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி,
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல்
உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம்
இடை கொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின்,
உடைபு நெஞ்சு உக, ஆங்கே ஒளியோடற்பாள்மன்னோ
10படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய்ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்?
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின்,
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகையாகத்
15துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்?
பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின்,
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்மன்னோ
இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்?
20என ஆங்கு
‘வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர்’ என,
புனையிழாய்! நின் நிலை யான் கூற, பையென,
நிலவு வேல் நெடுந் தகை நீள் இடைச்
செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே!

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, ‘இவ் வகைப்பட்ட சுரத்தைப் பொருள் காரணமாகப் பிரிகின்றீர் எனக் கேட்பின், இவ் வகை ஆகற்பாலள்’எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தமை தலைமகட்குச் சொல்லியது