| ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல், |
| வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும், |
| நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக் |
| காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும், |
5 | மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து |
| யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்! |
| 'ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல் |
| பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோதான் |
| நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள் |
10 | பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்? |
| 'சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ நின்று யாவர்க்கும் |
| இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோதான் |
| கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள் |
| இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்? |
15 | 'உறை வரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல், |
| முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோதான் |
| அழி படர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள் |
| பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்? |
| ஆங்கு |
20 | தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்; |
| இன் உறல் வியன் மார்ப! 'இனையையால்; கொடிது' என, |
| நின்னை யான் கழறுதல் வேண்டுமோ, |
| என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே? |