103
தோழி கூற்று


பொதுவர் ஏறு தழுவுதல்

மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
5பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார், மிடை
10அவர் மிடை கொள
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும்,
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
15கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்,
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்,
பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ,
20படு மழை ஆடும் வரையகம் போலும்
கொடி நறை சூழ்ந்த தொழூஉ
தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
25எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன

தோழி தலைவிக்குக் காட்டல்

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,
ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண்
30செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை
முந் நூலாக் கொள்வானும் போன்ம்
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு,
35தார் போல் தழீஇயவன்?
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்;
கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான்
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றுமவன்?
40தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல்
45கூற்று என: உட்கிற்று, என் நெஞ்சு
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள்
மறுப் போல் பொருந்தியவன்?
50ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல்
55மாயோன் என்று: உட்கிற்று, என் நெஞ்சு

'குரவை ஆடுவோருடன் கூடி, ஆடிப் பாடித் தெய்வம் பரவுவோம்' எனத் தோழி தலைவியை அழைத்தல்

ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்
மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும்
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ
60பயில் இதழ் மலர் உண்கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்
65அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்
வளியர் அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
70எளியவோ, ஆய மகள் தோள்?
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்
கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போல, புகின்
ஆங்கு,
75குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி,
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே!

ஆயர் ஏறு தழுவி நின்றமையைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டி,பின்னர், அவர் ஏறு தழுவிவிட்டுக் குரவை ஆடுகின்றமையும் கூறி, 'ஆண்டு யாமும் சென்று, நின்னை ஏறு தழுவிக் கோடற்கு நிற்கின்ற தலைவன் கேட்டு, ஏறு தழுவிக் கொள்ளுமாறு, நமக்குச் சுற்றத்தார் கூறிக் கிடக்கின்ற முறைமையைப் பாட்டிலே தோன்றப் பாடி, குரவை ஆடி, ''வழுதி வாழ்க!'' என்று தெய்வம் பராவுதும்' நீயும் அங்ஙனம் பாடுதற்குப் போதுவாயாக!' எனக் கூறியது (3)