104
தோழி கூற்றும் தலைவி கூற்றும்மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
5தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
10திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
15பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ
அவ் வழி, 'முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்
20ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின்
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான். வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
25சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி
அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப,
30குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
35பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்
இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க,
40வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன்
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்
45தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று,
தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,
மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை, 'ஒவ்வான்' எனப் பெயரும்
50மீளி மறவனும் போன்ம்
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
55பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர்,
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ
60தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர்,
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ

தலைவியையும் ஆயத்தையும் தன்னுடன் பாடத் தோழி அழைத்தல்

பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு

தலைவி

65நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்,
செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள், ஆயர் மகள்
தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
70அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல்,
'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும்
தருக்கு அன்றோ ஆயர் மகன்?

தோழி

நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
75ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த
ஊராரை உச்சி மிதித்து
ஆங்கு,
தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
80ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே

'நாடக வழக்கினும்' என்னும் சூத்திரத்து, 'பாடலுள் அமையாத' என்றதனால்,ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்கு காட்டிக் கூறி, 'இக் குரவையுள் அவனைப் பாடுகம் வா' என்றாட்கு, அவள் உடம்பாட்டினுள், தான் அலர் அச்சம் நீங்கினமையும், அவவன் தன்னை வருத்தினமையும், கூறிப் பாடிப், பின்னர், தோழி, 'நமர் அவற்கு நின்னைக் கொடை நேர்ந்தார்' எனக் கூறியது (4)