105
தோழி கூற்றும் தலைவி கூற்றும்


ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்

அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
5ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி,
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
10தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
15அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும்,
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்,
கால முன்பின் பிறவும், சால
20மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும்,
தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ
அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
25ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க,
நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து
30மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும்,
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு
35கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி,
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக்
40கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா
45வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப்
போதரும் பால் மதியும் போன்ம்!
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ

தோழி தன் நெஞ்சோடு தலைவி விரும்பக் கூறியது

50வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில்
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,
பாடு இல, ஆய மகள் கண்

தலைவியை நோக்கித் தோழி கூறுதல்

நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர,
சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,
55ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட
கொல் ஏறு போலும் கதம்?
நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்:
கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
60தம் கண் பொடிவது எவன்?

தலைவி

ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
65அலர் செய்து விட்டது இவ் ஊர்?
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்!
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன்
மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு?

தோழி

70என,
பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியாற் பரவுதும் 'நாடு கொண்டு,
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
75இமையத்து உம்பரும் விளங்குக!' எனவே

ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி, அவள் ஏறு தழுவிய தலைவனை விருப்பொடு நோக்கியவாற்றைத் தன்னுள்ளே கூறி, முன்னர்க் களவின்கண் தமர் கோபித்ததனையும் அயலார் பொறாதிருந்த தன்மையினையும் தலைவிக்குக் கூற, அவளும், 'அவர் அலர் கூறியது நன்று' என்று கூறி,'அன்றே என் நெஞ்சு கலந்து விட்டது; இனி அவர் கொடுப்பதாகக் கூறிய நாளில் செய்வது என்?' என மகிழ்ந்துகூற, அது கேட்ட தோழி, 'யாம் அங்ஙனம் கூடி இனிது இருக்குமாறு காக்கின்ற பாண்டியன் நீடு வாழுமாறு தெய்வத்தைப் பரவுகம் வா' எனக் கூறியது (5)