107
தோழி கூற்று


தலைவி

எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்
கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ
5தொழுவத்து,
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்
10அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது
கேட்டனள், என்பவோ, யாய்?

தோழி

கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!
அவன் கண்ணி அன்றோ, அது?

தலைவி

'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான்
15கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,
செய்வது இலாகுமோ மற்று?

தோழி

எல்லாத் தவறும் அறும்

தலைவி

ஓஒ! அஃது அறுமாறு?

தோழி தவறு அன்றாமாறு கூறலும் தலைவி பதிலும்

'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின்,
20நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
அன்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,
அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'

தோழி

அன்னையோ?
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
25ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து

தலைவி

மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!
வருந்துவேன் அல்லனோ, யான்?

தோழி

வருந்தாதி
30மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,
தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்ப, தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது