11
தலைவி கூற்று

‘அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என,
பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
5வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:
‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே
10‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே
‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
15துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரே
என ஆங்கு
இனை நலம் உடைய கானம் சென்றோர்
20புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே

தலைவி, மூன்றன் பகுதி தலைவன் கூறிப் பொருள்வயிற் பிரிகின்ற காலத்து,‘காடு கடியவாயினும், இவ் வகைப் பட்டனவும் உள’ என்று கூறினார்; அவை காண்டலின் வருவர்’ எனத் தோழிக்குக் கூறி, அதற்கு நிமித்தமும் கூறி, ஆற்றுவித்தது. மூன்றன் பகுதி கூறுதலாவது: ‘அறத்தினால் பொருள் ஆக்கி, அப் பொருளால் காமம் நுகர்வேன்’ என்றலாம். ‘உடைமையது உயர்ச்சி கூறிப் பிரிந்தான்’ எனக்கிளவி கூறின், பொருள் வயிற் பிரிதல் இன்றாம், அது பொருள்வயிற் பிரிவை விலக்கும் என்றலின் (10)