110
வினைவல பாங்கின் தலைவன் தலைவியர் கூற்று


'எம்மை எளியமாக் கருதினையோ?' என்ற தலைவியை நோக்கித் தலைவன் உரைத்தல்

'கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா!
இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத்
துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத்
5திளைத்தற்கு எளியமாக் கண்டை; "அளைக்கு எளியாள்
வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய்' ஒண்ணுதால்!
ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக
அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து,
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்!
10மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு
விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது,
கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும்,
15நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு
எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும்,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி,
கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி
அறியாது அளித்து என் உயிர்'

தலைவி

20அன்னையோ? மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை
இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்;
நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும்
கன்றொடு சேறும், புலத்து

வினை வல பாங்கினால் வெண்ணய் நொடைக்குச் சென்ற தலைவியைக் கண்டு வினை வல பாங்கின் தலைவன் மெய் தீண்டி, தனது ஆற்றாமையை அறிவித்துழி, அவள், 'ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்' என இடம் கூறியது