12
தோழி கூற்று

இடு முள் நெடு வேலி போல, கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி,
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
5கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு,
வெறி நிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி,
நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம்
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்!
10உரனுடை உள்ளத்தை; செய் பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை
15கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை
போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்!
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, காட்டது கடுமையும், தலைவியது மென்மையும், ‘நாளது சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும்,தகுதியது அமைதியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும்’ கூறி, செலவு அழுங்குவித்தது.