| 'அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான், |
| வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய |
| இருள் தூர்பு, புலம்பு ஊர, கனை சுடர் கல் சேர |
| உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை |
5 | இரப்பவன் நெஞ்சம் போல், புல்லென்று, புறம் மாறிக் |
| கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம், இலை கூம்ப |
| தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறாக, |
| நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை, |
| கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை! |
10 | மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்கண், |
| வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல், |
| அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ? |
| மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி, |
| போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல், |
15 | ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ? |
| மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண், |
| வெந்தது ஓர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல், |
| காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ? |
| என ஆங்கு, |
20 | இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை, |
| துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர |
| மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை |
| ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஆற்றும் |
| நல் இறை தோன்ற, கெட்டாங்கு |
25 | இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே |