122
தலைவி கூற்று

'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற,
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப,
காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி,
சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை;
5பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை;
அலவலை உடையை' என்றி தோழீ!
கேள், இனி:
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
10பேணி அவன் சிறிது அளித்தக்கால், என்
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்
இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
அருளி அவன் சிறிது அளித்தக்கால், என்
15மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும்,
புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்
20அதனால்,
யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம்
தான் அவர்பால் பட்டதாயின்,
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே

'காமம் சாலா இளமையோள்வயின்' பின் களவொழுக்கம் ஒழுகிய தலைவன் இடையிட்டுப் பிரிந்து,தொன் முறை மனைவியரொடு புணர்ச்சி எய்தி இருந்தானாக, அதனை அறிந்து ஆற்றாளாய தலைவி ஆற்றாமையைக் கண்டு வினாய தோழிக்கு, அத் தலைவி அவன் ஒழுகுகின்றவாறும், தன் நெஞ்சு அவன் வயத்தது ஆயவாறும்,கூறியது. 'மறையின் வந்த மனையோள் செய்வினை, பொறை இன்று பெருகிய பருவரற்கண்னும்'என்பதனாலும், 'பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை' என்னும் சூத்திரத்தானும் உணர்க. (5)