124
தோழி கூற்று

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய
நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை
வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!
5ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு, ஆங்கே,
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்
இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
10புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
துணையாருள் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்
இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
15வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி,
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெருங் கண் அல்லாக்கால்
அதனால்,
பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக்கால்,
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர,
20புரி உளைக் கலிமான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே

'வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று, ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே' என்பதனால்,களவு வெளிப்பட்ட பின், வரையாது, பொருள்வயின் பிரிந்து வந்தானைத் தோழி எதிர்ப்பட்டு நின்று,தலைவியது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது