| தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், |
| புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும், |
| வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத |
| செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல் |
5 | வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப! |
| கொடுங் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர், |
| நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ |
| கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க, |
| இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை? |
10 | குறி இன்றிப் பல் நாள், நின் கடுந் திண் தேர் வரு பதம் கண்டு, |
| எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ |
| அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிதாக, |
| செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை? |
| காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை, |
15 | யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ |
| வேய் நலம் இழந்த தோள் விளங்குஇழை பொறை ஆற்றாள், |
| வாள் நுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை? |
| அதனால், |
| இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர, |
20 | 'உரவுக் கதிர் தெறும்' என ஓங்கு திரை விரைபு, தன் |
| கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு |
| உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளிமே |