| உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே |
| வரை நில்லா விழுமம் உறீஇ, நடுக்கு உரைத்து, தெறல் மாலை |
| அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர, |
| அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன் |
5 | துன்னி அகல, துறந்த அணியளாய், |
| நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு, |
| பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந் நீர் தன், |
| கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர, |
| தேர் வழி நின்று தெருமரும்; ஆயிழை |
10 | கூறுப கேளாமோ, சென்று? |
| 'எல்லிழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று, |
| உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது |
| கேட்டீமின், எல்லீரும் வந்து |
| வறம் தெற மாற்றிய வானமும் போலும்; |
15 | நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் |
| சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து, |
| என்மேல் நிலைஇய நோய் |
| 'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும் |
| தக்கவிர் போலும்! இழந்திலேன்மன்னோ |
20 | மிக்க என் நாணும், நலனும், என் உள்ளமும், |
| அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன! |
| உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக, |
| செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான் |
| நக்கது, பல் மாண் நினைந்து |
25 | கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் |
| புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்! |
| வரைபவன் என்னின் அகலான் அவனை, |
| திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம், |
| நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும் |
30 | உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான் |
| யாண்டு ஒளிப்பான்கொல்லோ மற்று? |
| மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும் |
| மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி |
| யாமம் தலை வந்தன்றுஆயின், அதற்கு என் நோய் |
35 | பாடுவேன், பல்லாருள் சென்று |
| யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும் |
| யாமம்! நீ துஞ்சலைமன் |
| எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண் |
| முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின், |
40 | கதிர்கள் மழுங்கி, மதியும் அதிர்வது போல் |
| ஓடிச் சுழல்வதுமன் |
| பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே! |
| நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின் |
| கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது |
45 | போலாது, என் மெய்க் கனலும் நோய் |
| இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே, |
| வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்; |
| அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி, |
| பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச் |
50 | செல்வேன், விழுமம் உழந்து |
| என ஆங்குப் பாட, அருள் உற்று, |
| வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் |
| புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன் |
| நல் எழில் மார்பன் முயங்கலின், |
55 | அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே |