16
தோழி கூற்று

பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க,
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர்திறத்து, இனி
நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்? அதுவும்தான்
5தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார்,
துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை,
'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என,
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ?
புனையிழாய்! ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி,
10முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை,
‘சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!’ என,
கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?
ஒளியிழாய்! ஈங்கு நாம் துயர் கூர, பொருள்வயின்,
அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை,
15‘முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக!’ என,
வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?
என ஆங்கு,
செய் பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு, இனையன
தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் தேமொழி!
20‘வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு’ என,
அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினைத் திறத்தே

தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, அவன் போகிய காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைமகள், ‘அவர் பொருட்டாக நாம் இவ் வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?’ என, கேட்ட தோழி, ‘அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா’ எனக் கூறியது(15)