18
தோழி கூற்று

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,
பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:
5சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
10ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரேஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ,
சென்ற இளமை தரற்கு!

‘ஒன்றாத் தமரினும்’ என்னும் சூத்திரத்தில் ‘நாளது சின்மையும், இளமையதுஅருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையது இழிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும்’ எனக் கூறிய எட்டினையும் தலைவன் கூறக் கேட்ட தோழி, அவற்றை ‘நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ என்னும் விதியால் தலைவற்குக் கூறிச் செலவு அழுங்குவித்தது.(17)