19
தோழி கூற்று

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
5பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி
செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை
10என் திறம் யாதும் வினவல்; வினவின்,
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி செலவு விலக்கவும், பிரிவின்மேல் சென்ற உள்ளத்தன் ஆயினானை, 'நீ பிரியின், இவள் இறந்துபடும்' எனச் சொல்லிய வாய்பாட்டான் மறுத்தது.