24
தலைவி கூற்று

‘நெஞ்சு நடுக்குறக் கேட்டும், கடுத்தும், தாம்
அஞ்சியது ஆங்கே அணங்காகும்’ என்னும் சொல்
இன் தீம் கிளவியாய்! வாய் மன்ற: நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட, யானும்,
5‘இது ஒன்று உடைத்து’ என எண்ணி, அது தேர,
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்,
பாயல் கொண்டு என் தோள் கனவுவார், ‘ஆய் கோல்
தொடி நிரை முன் கையாள் கையாறு கொள்ளாள்,
கடி மனை காத்து, ஓம்ப வல்லுவள்கொல்லோ
10இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்
நெடு மலை வெஞ் சுரம் போகி, நடு நின்று,
செய் பொருள் முற்றும் அளவு?’ என்றார்; ஆயிழாய்!
தாம் இடை கொண்டது அதுவாயின், தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேமாயின்,
15‘தொய்யில் துறந்தார் அவர்’ என, தம்வயின்,
நொய்யார் நுவலும் பழி நிற்ப, தம்மொடு
போயின்று, சொல், என் உயிர்

தலைமகன் குறிப்புக் கண்டு, ‘பிரிவன்’ என ஐயுற்றுச் செல்கின்ற தலைவி,அக்காலத்துத் தலைவன் கனவின் அரற்றினமை கேட்டு, ‘பொருள்வயிற் பிரிகின்றான்’எனத் துணிந்து, ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்பதனால், அந்தணன் அறம் கருதித் தூதின் பிரிந்து, அவ் அரசர் செய்த பூசனை வாங்கிக் கொண்டு வருதற்குப் பிரிகின்றது என்று கொள்க. ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமம்’ கூறுகின்றது.(23)