| வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற |
| முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், |
| ‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா, |
| கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு, |
5 | களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, |
| முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், |
| ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் |
| உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, |
| எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம், |
10 | அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம் |
| குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ் சுரம் |
| இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்: |
| மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய், சிறிது நீர் |
| தணக்குங்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ |
15 | சிறப்புச் செய்து உழையராப் புகழ்பு ஏத்தி, மற்று அவர் |
| புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்? |
| ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர் |
| நீங்குங்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ |
| செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர் |
20 | ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்? |
| ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து, ஒரு நாள் நீர் |
| பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ |
| பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை |
| பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்? |
25 | என ஆங்கு, |
| யாம் நிற் கூறுவது எவன் உண்டு? எம்மினும் |
| நீ நற்கு அறிந்தனை; நெடுந் தகை! வானம் |
| துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் நின் |
| அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே |