29
தோழி கூற்று

‘தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்,
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர;
5வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள;
இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார;
மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல்,
ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர;
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்
10சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி!
நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன்? நிறை நீவி,
வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி,
நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்
போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச்
15சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன்? கைநீவி
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்
தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மன்? வலிப்பவும்,
20நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட
கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்’
என ஆங்கு,
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப்
பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம்
25அருந் துயர் களைஞர் வந்தனர்
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே

பருவ வரவின்கண் ஆற்றாத தலைவியைத் தோழி வற்புறுப்ப, வன்புறை எதிர் அழிந்தாட்கு, தோழி அவன் வரவு உணர்ந்து கழி உவகையால் கூறியது