31
தோழி கூற்று

‘கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற,
நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப்
5புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன,
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்,
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன்
"பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை
மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர்,
10தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ
பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு,
வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை?
தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு,
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
15நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு,
தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை?
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர்
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ
புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா
20முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி?'
என ஆங்கு,
வாளாதி, வயங்கிழாய்! ‘வருந்துவள் இவள்’ என,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
மீளி வேல் தானையர் புகுதந்தார்
25நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே

‘இளவேனிற் காலத்து வருவல்; அத்துணையும் ஆற்றியிரு’ என்று மண் நசையால் வேந்தன் சென்றவழி, முன்பனிக் காலமும் பின்பனிக் காலமும் வந்து வருத்தலின்,ஆற்றாத தலைவியைத் தோழி, ‘வருவர்’ என வற்புறுப்பவும், வன்புறை எதிர் அழிந்த வழி, தலைவன் ‘யாம் குறித்த பருவம் வரும்துணையும் ஆற்றியிராள்’ எனப் பின்பனிக் காலத்து வருகின்ற வரவு உணர்ந்து, தோழி கழி உவகையால் கூறியது(30)