| கய மலர் உண்கண்ணாய்! காணாய்: ஒருவன் |
| வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட |
| கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு, |
| முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற |
5 | நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; |
| பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின் |
| சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் |
| கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்; |
| பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; ‘இன்னதூஉம் |
10 | காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் |
| தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர் |
| நாண் இன்மை செய்தேன்: நறுநுதால்! ஏனல் |
| இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல், |
| ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை, |
15 | ‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற, |
| ‘தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு |
| பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து, |
| ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல் |
| மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை |
20 | மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென, |
| ‘ஒண்குழாய்! செல்க’ எனக் கூறி விடும் பண்பின் |
| அங்கண் உடையன் அவன் |