| ‘பாடுவோம்’ என்ற தோழியை நோக்கித் தலைவி உடம்பட்டுக் கூறுதல் |
| ‘அகவினம் பாடுவாம், தோழி!’ ‘அமர் கண் |
| நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல், |
| தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ, |
| முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின் |
5 | வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி, |
| பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி, |
| அகவினம் பாடுவாம், நாம்’ |
| தோழியின் மறுமொழி |
| ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள், |
| தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு |
10 | வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை |
| தலைவி இயற்படப் பாடாமையின் தோழி பாடுதல்
|
| கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல், |
| எடுத்த நறவின் குலை அலங்காந்தள் |
| தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார் |
| இடுக்கண் தவிர்ப்பான் மலை |
15 | கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து, |
| மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே |
| தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும் |
| அல்லற்படுவான் மலை |
| தலைவி இயற்பழித்துப் பாடுதல்
|
| புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத் |
20 | தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான் |
| அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் |
| விண் தோய் வரை, பந்து எறிந்த அயா வீட, |
| தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே |
| பெண்டிர் நலம் வௌவி, தண் சாரல் தாது உண்ணும் |
25 | வண்டின் துறப்பான் மலை |
| தோழி இயற்பட மொழிதல்
|
| ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற |
| கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத் |
| தீம் கண் கரும்பின் கழை வாங்கும் 'உற்றாரின் |
| நீங்கலம்' என்பான் மலை |
| தலைவன் வரைவொடு புகுந்தமையைத் தோழி தலைவிக்கு அறிவித்தல்
|
30 | என நாம், |
| தன் மலை பாட, நயவந்து கேட்டு, அருளி, |
| மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா |
| மென் முலை ஆகம் கவின் பெற, |
| செம்மலை ஆகிய மலைகிழவோனே |